தீப்பாதுகாப்புச் சோதனைகள்
வெளி அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்
சிக்கல் அல்லாத விதிமீறல் சம்பவங்களில் தீப்பாதுகாப்பு சோதனைகளை, அடுத்த மாதம் முதல் வெளி அமைப்பு ஒன்று மேற்கொள்ளும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) நேற்று தெரிவித்தது. இக்குறிப்பிட்ட பொறுப்பை வெளி அமைப்பிடம் ஒப்படைப்பதால், தீயணைப்பு, விபத்துகள் போன்ற வேறு செயல்பாட்டுத் தேவைகள் மீது தாங்கள் அதிக கவனம் செலுத்த முடியும் என்று எஸ்சிடிஎஃப் விளக்கியது.
வெளி அமைப்பைச் சேர்ந்தவர்கள், துணை அமலாக்க அதிகாரிகளாக மே 3ஆம் தேதி முதல் பங்காற்றவுள்ளனர். தீப்பாதுகாப்பு தொடர்பில் நேரில் பார்த்து விதிமீறலைக் கண்டறிவதற்கு மட்டுமே இவர்களின் உதவி நாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு முதல் எஸ்சிடிஎஃப் 13,600 அமலாக்கச் சோதனைகளை நடத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விதிமீறல் தொடர்பில் கிட்டத்தட்ட 2,600 எச்சரிக்கைக் கடிதங்களைப் பிறப்பித்துள்ளது. எஞ்சிய சம்பவங்கள், சிக்கல் அல்லாத விதிமீறலாகும்.
'சில்லி அப்பி கேட்டரிங்' நிறுவனம்
மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது
சிங்கப்பூர் உணவு அமைப்பு விதித்திருந்த நடைமுறைகளை 'சில்லி அப்பி கேட்டரிங்' நிறுவனம் அமல்படுத்தியதை அடுத்து, அதன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மார்ச் 10 முதல் 13 வரை, நிறுவனம் தயார்செய்த உணவைச் சாப்பிட்ட 129 பேருக்கு இரைப்பைக் குடல் அழற்சி ஏற்பட்டதாக புகார்கள் கிடைத்ததை அடுத்து, மார்ச் 14 முதல் காலவரையின்றி 'சில்லி அப்பி கேட்டரிங்' நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே, இரைப்பை பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறியும் பணிகள் இன்னும் நடந்துவருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் கூட்டு அறிக்கையில் நேற்று தெரிவித்தன.
தமிழ்மொழி விழாவின் நிறைவு
நிகழ்ச்சியில் பாரதியாரின் எள்ளுப் பேரன்
ஏப்ரல் மாதம் முழுவதும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் சிங்கப்பூரில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் விழாக்கள் நடத்தி வருகின்றன. இதன்படி தமிழ்மொழி மாத நிறைவு விழாவை நாளை மாலை 6 மணிக்கு 'ஸூம்' வழியாக கவிமாலை அமைப்பு நடத்த இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கே. கார்த்திகேயன் கலந்துகொள்வார். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர்
சு. மனோகரன் தமிழ்மொழி விழாவின் நிறைவுரை ஆற்ற இருக்கிறார்.
மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனும் திரைப்படப் பாடலாசிரியருமான கவிஞர் நிரஞ்சன் பாரதி வாழ்த்துரை வழங்க இருக்கிறார். விழாவில் எம்.ஏ. முஸ்தபா வழங்கும் கணையாழி விருது, தொழிலதிபர் ஜி.வி. இராம் வழங்கும் இளங்கவிஞர் தங்கமுத்திரை விருது ஆகியவற்றுடன் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிங்கப்பூர் வள்ளல் அப்துல் ஜலீல் பரிசுகள் அளிக்கவிருக்கிறார். சிங்கப்பூர்க் கவிஞர்களின் பாடல்களுக்கு 'பசலை' என்ற பெயரில் தமிழகத்தின் 'தியேட்டர் நிஷா', நவீன நாடகத்தை அரங்கேற்றுவார்.
விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் Zoom 836 991 7422 வழி இணையலாம். தகவலுக்கு 90053043 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

