தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர்கள், தங்களின் மேல்நிலைச் சான்றிதழை நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்றே ஆண்டுகளில் பெறலாம். இது 2026ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் உயர் நைட்டெக் பாடங்களை முடித்து மூன்று ஆண்டுகளில் தங்களின் சான்றிதழ்களைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு முதல், 16 ஐடிஇ பாடங்களுக்கான பாடத்திட்ட அமைப்புமுறை மாற்றம் காணவுள்ளது.
இந்த 16 பாடங்களிலும் 2022ல் கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் பதிவுசெய்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிஇ கல்லூரி (கிழக்கு) வளாகத்தில் புதிய பயிற்சி நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்தபோது, கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் இதனை அறிவித்தார்.
தற்போதைய பாடத்திட்ட அமைப்புமுறைப்படி, நைட்டெக் நிலையில் ஈராண்டு, உயர் நைட்டெக் நிலையில் ஈராண்டு என்று உள்ளது.
இதற்குப் பதிலாக புதிய அமைப்புமுறை அமல்படுத்தப்படவுள்ளது. 2026க்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய அமைப்புமுறையின் முதற்கட்ட அமலாக்கமே இந்த 16 பாடங்கள் என்று கூறப்பட்டது. நைட்டெக் பாடங்கள் 8, உயர் நைட்டெக் பாடங்கள் 8 ஆகியவை அக்குறிப்பிட்ட 16 பாடங்களில் இடம்பெறவுள்ளன.
பல்வேறு வகையான மாணவர்களுக்கு ஏற்ப, பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்குள் புதிய மூன்றாண்டு திட்டமாக 80% ஐடிஇ பாடங்கள் மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
"நைட்டெக் கல்வித்தகுதிக்கும் மேல் ஒவ்வொரு ஐடிஇ பட்டதாரியும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக வாய்ப்புகள் வழங்குவதில் கல்வி அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் அவர்கள் தங்களின் வேலையில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் இது நடக்க வேண்டும் என்று பிரதமர் தமது 2019 தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இந்தப் புதிய திட்டம் துணையாக உள்ளது," என்றார் டாக்டர் மாலிக்கி.

