துணை நுண்ணுயிரியல் நிபுணராகப் பணியாற்றும் தங்கவேலு லதா, 2019ல் அவரது மகனுக்கு 'ஈவிங் சர்க்கோமா' எனும் புற்றுநோய் வகை வந்தது என்று தெரிய வந்தபோது தனது நீண்ட முடியைத் துறந்தார்.
தலையில் முடியில்லாமல் போனால் வெட்கப்பட வேண்டியதில்லை என்று தமது 14 வயது மகன் ரானுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அவரும் அவரது கணவரும் தங்கள் தலைமுடியை அடிக்கடி மழித்து வருகின்றனர்.
ரானின் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை தற்போது முடிந்துவிட்டது.
"புற்றுநோய் என்று முதலில் தெரிந்தவுடன், கடைசி முடி இருக்கும் வரை தலைமுடியை மழித்து விடக்கூடாது என்று அவர் விரும்பினார். நாங்கள் இருவரும் தலை முடியை மழித்த பின்னர்தான் அவரும் தலைமுடியை மழித்துக் கொள்ள ஒப்புக்கொண்டார்," என்றார் திருவாட்டி லதா, 42.
இவ்வாண்டு 'ஹேர் ஃபார் ஹோப்' நிகழ்ச்சியைத் தொடங்கும் விதமாக தலைமுடியை மழித்துக்கொண்டவர்களில் அவரும் ஒருவர்.
புற்றுநோய் உள்ள சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுவதற்காக ஆண்டுதோறும் சிறுவர் புற்றுநோய் அறநிறுவனம் அந்த நன்கொடைத் திரட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இவ்வாண்டு சுமார் 1,500 பேர் தங்கள் தலைமுடியை மழித்துக்கொள்வதும் அதன்வழி $1.5 மில்லியனைத் திரட்டுவதும் ஏற்பாட்டாளர்களின் இலக்காகும்.
18 ஆண்டுகளாக நடைபெறும் அந்த நிகழ்ச்சி இவ்வாண்டு இணையம்வழி நடத்தப்படுகிறது. கடந்தாண்டு, கொவிட்-19 கிருமிப்பரவலால் நன்கொடைத் திரட்டு நடைபெறவில்லை.
இவ்வாண்டு பங்கேற்பாளர்களின் தலைமுடியை மழிக்கும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறாது. அதனால் அவர்கள் தங்கள் தலைமுடியை மழிக்க சொந்தமாக ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். ஹேர் ஃபார் ஹோப் நிதி திரட்டுடன் கைகோர்த்துள்ள 11 பங்காளித்துவ முடி திருத்தும் கடைகளுக்குச் சென்று மொட்டையிட்டுக் கொள்பவர்களுக்கு 20% கட்டணக்கழிவு உண்டு.
நன்கொடைத் திரட்டின் தொடர்பிலான சில நிகழ்ச்சிகள் சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அந்த அமைப்புக்கான நன்கொடைகள் இணையம் வழியாக பெறப்படும்.
நன்கொடைத் திரட்டின்போது, பலர் முன்வந்து பதிவு செய்துகொண்டு தங்கள் தலைமுடியை மழித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஆதரவாக நன்கொடைகள் திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

