கூ டெக் புவாட் மருத்துவமனை அதன் ஊழியர்கள் ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அதன் ஆய்வுக்கூடத்தின் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட தவறால் மார்பகப் புற்றுநோயாளிகள் சிலருக்கு தேவையில்லாத சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தவறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவமனை நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டது. மேலும், அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்போவதாகவும் அது கூறியது.
ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அதனைச் செய்வதற்கு சில காலம் பிடிக்கும் என்றும் கூ டெக் புவாட் மருத்துவமனையின் மருத்துவ மன்றத் தலைவர் இணைப் பேராசிரியர் பெக் வீ யாங் கூறினார். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பபடும் என்றார் அவர்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களில் நிர்வாகப் பணியில் உள்ளவர்களும் அடங்குவர். கடுமையான எச்சரிக்கை, அபராதம், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அவர்களுக்கு ஆலோசனை, மறுபயிற்சி, கல்வி ஆகியவையும் அளிக்கப்பட்டன.
ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புற்றுநோய்க் கட்டியின் திசுக்களுக்கு மையிடுவதில் ஏற்பட்ட மனிதத் தவறால் சிலருக்கு கடுமையான ஹெர்2 (HER2) வகை மார்பகப் புற்றுநோய் இருப்பதாக தவறாகக் கண்டறியப்பட்டது. அதனால் அவர்களுக்குத் தேவையில்லாத சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆய்வுக்கூட ஊழியர்கள் முறையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை முறையாக நடத்தவில்லை என்று விசாரணையில் கண்டறிந்ததாகவும் மருத்துவமனை சொன்னது.

