முன்னதாக 11 வயது சிறுவனை மானபங்கம் செய்ததன் தொடர்பில் 2013ல் சிறைக்குச் சென்ற டொக் சொன் செ, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மார்ச் 2019ல் கிழக்குப் பகுதியில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு ஒன்றில் தோட்ட வேலை பார்த்து வந்த 74 வயது டொக், ஏழு வயது சிறுவனை இம்முறை குறிவைத்தார்.
குற்றம் நடந்த சமயத்தில் சிறுவன் தன் தந்தையுடன் அக்கூட்டுரிமை குடியிருப்பில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
சிறுவனைத் தன் மடியில் உட்கார வைத்து டொக் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று சிறுவனின் உதட்டில் முத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
சிறுவனின் அண்டைவீட்டார் ஒருவர் அவ்வழியாகச் சென்றபோது நடந்ததைப் பார்த்துவிட்டார்.
பின்னர், மீண்டும் அவர்கள் இருந்த இடத்திற்கு அந்த அண்டைவீட்டுக்காரர் சென்று பார்த்தபோது, சிறுவனும் முதியவரும் பாலியல் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்.
நடந்ததைப் பற்றி புகார் அளிக்கவேண்டாம் என்று டொக் கெஞ்சியதைப் பொருட்படுத்தாமல் அந்த 45 வயது பெண்மணி, பாதுகாவல் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.
சிறுவனை மானபங்கம் செய்த குற்றத்தை டொக் ஒப்புக்கொண்டதை அடுத்து நேற்று முதியவருக்கு ஓராண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

