மகனைத் துன்புறுத்திய பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது அவரது சகோதரர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது அந்தச் சகோதரருக்கு 13 வயது. சிறுவர் இல்லத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தமது தந்தையும் தம்மைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அப்பெண் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இது அப்பெண்ணுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தமக்குப் பாதிப்பை ஏற்படுத்திய சகோதரர் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார். தமது மூன்று பிள்ளைகள், தாயார், சகோதரர் ஆகியோரைக் கொன்று தமது உயிரையும் மாய்த்துக்கொள்ள அவர் 2019ஆம் ஆண்டில் திட்டமிட்டிருந்தார்.
அனைவரையும் உயிருடன் தீயிட்டு எரிக்க அப்பெண் திட்டமிட்டார். ஆனால் செல்ல மகன் வலியால் துடித்து இறப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால் அந்தச் சிறுவனுக்கு அப்பெண்ணின் சகோதரரின் சாயல் இருந்ததால் சிறுவன் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறைந்தது 13 முறை அந்தச் சிறுவனுக்கு இன்சுலின் ஊசியை அப்பெண் போட்டார்.
அளவுக்கு அதிகமான இன்சுலினை உடலுக்குள் செலுத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்து மரணம் ஏற்படக்கூடும் என்று அப்பெண்ணுக்குத் தெரியவந்ததும் அவர் அவ்வாறு செய்தார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோகூர் பாருவுக்குச் சென்று அங்குள்ள மருந்துக்கடையில் இன்சுலின் ஊசிகளை அவர் வாங்கினார். யூடியூப் காணொளிகளைப் பார்த்து அவற்றைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொண்டார்.
அப்பெண்ணின் இச்செயலின் காரணமாக அவரது மகனின் ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்குத் தலைவலி ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதியன்று அச்சிறுவன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மொத்தம் மூன்று முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருமுறை மிகக் குறைவான ரத்த சர்க்கரை அளவின் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

