திறந்த மின்சாரச் சந்தை நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட 49% குடியிருப்பு பயனீட்டாளர்கள் தங்களின் மின்சார விற்பனையாளரை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மின்சார விற்பனையாளரிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் பயனீட்டாளர்களில் 43 விழுக்காட்டினர், நிலையான விலைத் திட்டத்தின் கீழும் 5 விழுக்காட்டினர் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தின் கீழும் இணைந்துள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் நேற்று தெரிவித்தது.
ஒப்பந்த காலம் முடியும் வரை ஒரே வீதத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதே நிலையான விலைத் திட்டம். ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுப்போர், ஒப்பந்த காலத்தின்போது நிலையான கட்டணக் கழிவுக்குத் தகுதிபெறுவர்.
பயனீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான மின்சார வழங்குநரைத் தேர்ந்தெடுக்க திறந்த மின்சாரச் சந்தை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது நாடளவில் நவம்பர் 2018 முதல் மே 2019 வரை படிப்படியாக அமலாக்கம் கண்டது.
இதற்கு முன், சிங்கப்பூரின் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்கும் ஒரே நிறுவனமாக 'எஸ்பி குழுமம்' இருந்து வந்தது.
மின்சார விற்பனையாளர்கள் மொத்தம் 12 உள்ள நிலையில், 'கெப்பல் இலெக்ட்ரிக்' நிறுவனமே பயனீட்டாளர்கள் அதிகமானோரின் தேர்வாக உள்ளது. கிட்டத்தட்ட 22% வீடுகளுக்கு இந்நிறுவனம் மின்சாரம் வழங்கி வருகிறது. இதையடுத்து, சுமார் 20% வீடுகளுக்கு 'ஜெனிகோ' நிறுவனமும் சுமார் 15% வீடுகளுக்கு 'துவாஸ் பவர்' நிறுவனமும் உள்ளன.
பயனீட்டாளர் மனநிறைவு
கருத்தாய்வு முடிவுகள்
இத்தகவல்களுடன் ஆணையம் அதன் 'பயனீட்டாளர் மனநிறைவுக் கருத்தாய்வு' முடிவுகளையும் வெளியிட்டிருந்தது.
பயனீட்டாளர்கள் தங்களது தற்போதைய விலைத் திட்டத்தைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக மேலும் சாதகமான திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பங்கேற்றிருந்தன. தங்களின் தற்போதைய விற்பனையாளருடனேயே தொடர்வதாக 28 விழுக்காட்டினர் மட்டுமே கூறியிருந்தனர்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இதே கருத்தாய்வு அறிக்கையில், அது 49 விழுக்காடாக இருந்தது.
பத்தில் ஒன்பது பேர், வெவ்வேறு விற்பனையாளர்களின் விலைத் திட்டங்களை ஒப்பிட்ட பின்னர் மாறிக்கொண்டதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற சுமார் 96 விழுக்காட்டினர், மின்சார விற்பனையாளர் மாற்றிக்கொள்வது அல்லது தற்போதைய விற்பனையாளருடன் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது எளிதான முறையில் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், கூடுதல் மின்சார விற்பனையாளர்களுக்குப் பயனீட்டாளர்களிடமிருந்து சிறந்த மதிப்பீடு கிடைத்துள்ளதாகவும் ஆய்வு தெரிவித்தது.
ஆக அதிகளவு மனநிறைவைக் குறிக்க ஐந்து நட்சத்திர முறை இம்மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இங்குள்ள 12 மின்சார விற்பனையாளர்களில், 'சன்சிப் எனர்ஜி' நிறுவனத்திற்கு மட்டுமே ஐந்து நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. மொத்தம் ஆறு விற்பனையாளர்களுக்கு 4.5 மற்றும் அதற்கு மேலான நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. ஓராண்டுக்கு முன்னதாக, நான்கு நிறுவனங்களுக்கு மட்டுமே இத்தகைய சிறந்த மதிப்பீடு கிடைத்திருந்தது.
இந்த மதிப்பீடுகள் எரிசக்தி சந்தை ஆணையத்தின் இணையத்தளத்தில் ஆறு மாதங்கள் ஒரு முறை தெரிவிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

