முதியவரின் உயிரைக் காப்பாற்றிய மாணவன்

2 mins read
42dbe7d9-9c51-489f-950f-5823b44be027
செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் சுப்பிரமணியத்துக்கு விருது வழங்குகிறார் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதலாம் படைப் பிரிவின் தலைவர் சைஃபுல் ஹெர்மான். படம்: செயின்ட் ஆண்ட்ரூஸ் முன்னாள் மாணவர் சங்கம் -

ஆர்த்தி சிவராஜன்

முதியவர் ஒருவர் சுயநினைவை இழந்து தரையில் கிடந்ததைக் கண்ட 11 வயது ஸ்ரீராம் சுப்பிர மணியம் உடனடியாக உதவி பெற அருகிலுள்ள பேரங்காடி மற்றும் அக்கம்பக்க போலிஸ் சாவடிக்கு ஓடினார். அவரின் முயற்சிகள் அம்முதியோரின் உயிரைக் காப்பாற்ற உதவின.

அவரின் மனிதநேயத்தையும் உதவும் குணத்தையும் பாராட்டும் வகையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவருக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக உயிர்க்காப்பாளர் விருதை வழங்கியது.

செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் ஸ்ரீராம், மார்ச் 23 அன்று மாலை 4.45 அளவில் தனது துணைப்பாட வகுப்பிற்குச் செல்லும்போது பொத்தோங் பாசிர் சமூக மன்றம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்த முதியவரைக் கண்டார். வலியில் துடித்த அவரை சோதித்த ஸ்ரீராம், அவர் சுயநினைவை இழந்து பதிலளிக்கவில்லை என்பதை அறிந்தார்.

சுற்றி இருந்தவர்களின் உதவியை உடனடியாக நாடினார் ஸ்ரீராம். பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்தவர்கள் உதவ முன்வராததால், அருகில் உள்ள பேரங்காடி மற்றும் அக்கம்பக்க போலிஸ் சாவடிக்கு விரைந்து உதவி கேட்டார்.

இதற்கிடையில், ஸ்ரீராம் முன்பு அணுகிய இருவர் அந்த முதியவருக்கு சிபிஆர் (CPR) செய்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ வாகனம் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வரை அவருக்கு உதவினர்.

முடிந்த வரை உதவி செய்து அந்த முதியவர் முறையாக கவனிக்கப்படுவதை அறிந்த பிறகே ஸ்ரீராம் தனது துணைப்பாட வகுப்பிற்குச் சென்றார்.

தயக்கமின்றி அவரது உடனடி நடவடிக்கைகளையும் அவரது விடாமுயற்சியையும் பாராட்டிய முதல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக ஈடுபாட்டின் தலைவரான திரு சங் லிப் எர்ன், "ஸ்ரீராம் உண்மையிலேயே ஒரு சமாரியன். நம் சமூகம் பெருமைப்பட வேண்டிய ஓர் இளம் வீரர்," என்றும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து கருத்து உரைத்த ஸ்ரீராம், "நான் இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு என்னால் முடிந்த வரை உதவ வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன். விருது கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்," என்றார்.