தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஊழியர்கள் போக்குவரத்தில் விதிமுறை மாற்றம் செய்தால் கட்டுமானத் துறைக்கு கடும் பாதிப்பு நேரும்'

2 mins read
2ecf28a6-f45c-49c0-af6d-0d0d3d15af12
லாரிகளில் இருக்கை வார் பொருத்துவது, லாரிக்குப் பதிலாக ஊழியர்களை வேனில் ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல பரிந்துரைகளைப் பத்தாண்டுகளுக்கு முன்னரே பணிக்குழு ஒன்று பரிசீலித்ததாகவும் அவற்றை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழியர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நிறுவனங்கள் கொண்டு செல்லும் முறை தொடர்பில் விதிமுறைகளை இப்போது மாற்றுவதால், கட்டுமானத் துறையில் கடும் பாதிப்பு ஏற்படும்.

இதனால் கட்டுமானத் திட்டங்களில் தாமதம், துறையில் வேலையிழப்புகள் நேரும் என்றார் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர். லாரிகளில் இருக்கை வார் பொருத்துவது, லாரிக்குப் பதிலாக ஊழியர்களை வேனில் ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல பரிந்துரைகளைப் பத்தாண்டுகளுக்கு முன்னரே பணிக்குழு ஒன்று பரிசீலித்ததாகவும் அவற்றை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் காயம், உயிரிழப்புகள் நேர்ந்த மூன்று அண்மையச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (மே 10) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் கோர் பதிலளித்தார்.

சட்ட திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்கம், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கம் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றார் அவர். செலவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றால் கடந்த பத்தாண்டுகளில் ஊழியர் போக்குவரத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தது என்றார்.

"பயணிகள் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஒவ்வோர் உயிரிழப்பும், ஒவ்வொரு காயமும் மிக அதிகமே. நம் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தித் தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளோம். ஆனால், இது பல நிலைகளைக் கொண்ட ஒரு விவகாரம். இதன் பின்விளைவுகளும் பல," என்றார் அமைச்சர்.

"இத்தகைய விவகாரங்களைப் பரிசீலிக்கும் அதே வேளையில் ஊழியர்களின் பாதுகாப்பு, அவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை உறுதிசெய்ய, சமநிலையுடைய, நிலைமைக்கு ஏற்ற ஓர் அணுகுமுறையை நாம் கண்டறிய வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்," என்று டாக்டர் கோர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்