மூத்தோருக்கும் உடல் நலிவுற் றோருக்கும் நீண்டகால தாதிமை சேவையை வழங்கி வரும் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம், மூப்படையும் சமூகத்தின் தேவைகளை ஈடுகட்டும் வகையில் மற்றொரு மூத்தோர் பராமரிப்பு நிலையத்தை திறக்கவுள்ளது. ஈசூன் அவென்யூ 6ல் அமைய விருக்கும் இந்தப் புதிய இல்லம், 2025க்கு பிறகு கட்டி முடிக்கப்படும்.
சுகாதார அமைச்சு சில மாதங்களுக்கு முன்பு ஈசூனில் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றை அமைப்பதற்கான குத்தகையை ஏலத்திற்கு விட்டது. இந்த குத்தகை ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலை ஜிபிஸ் (GeBiz) தளம் நேற்று வெளியிட்டதாக இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ஈசூன் அவென்யூ 5ல் தற்போது உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் 224 பேருக்கு படுக்கை வசதி உள்ளது. ஒன்பது மாடிகள் கொண்ட புதிய வசதியில் 302 படுக்கை வசதிகள் அமைக்கப்படும் என்று 2016ஆம் ஆண்டிலிருந்து தலைமை நிர்வாகியாகப் பணியாற்றிவரும் திரு தேவேந்திரன் கூறினார். "இதன் தொடர்பில் எங்களது மேலாளர் அவை, நிர்வாக செயற்குழு, ஊழியர்கள் மற்றும் பங்காளிகள் அனைவரும் பெரும் ஆதரவை அளித்துள்ளனர். 42 ஆண்டு களுக்குப் பிறகு இரண்டாவது இல்லத்தை நடத்துவதற்கான வாய்ப்பு பெற்ற நாங்கள், மூத்தோருக்குக் கூடுதல் பராமரிப்புச் சேவை அளிக்கும் பேற்றை அடைந்திருப்ப தாகக் கருதுகிறோம்," என்று அவர் கூறினார்.
இந்திய சமூகத்தினரிடமும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம், சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில்சபை, தமிழர் பேரவை, இந்து அறக்கட்டளை வாரியம், கடையநல்லூர் இந்திய முஸ்லிம் சங்கம் உள்ளிட்ட இந்திய அமைப்புகளிலிருந்தும் பேராதரவு பெற்று வருவதாக திரு தேவேந்திரன் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் பேசிய ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன், சுகா தார அமைச்சிடம் இல்லத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது குறித்து பெருமை அடைவ தாகத் தெரிவித்தார்.
சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இல்லவாசிகளை கூடுதல் பாதுகாப்புடன் பராமரிப்பதற்காகவும் 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையே புதிய சாதனங்கள் தருவிக்கப்பட்டன. மருத்துவத் தள்ளுவண்டிகளை மாற்றுதல், சாய்ந்து அமரக்கூடிய சக்கர நாற்காலிகளை அறிமுகம் ெசய்தது போன்றவை மேம்பாடுகளில் அடங்கும். 2015ஆம் ஆண்டில் இந்த இல்லம் புதிய தானியக்க மின்கட்டில்களைப் பெற்றது.
புதிய இல்ல உருவாக்கத்திலும் இந்த முன்னேற்றப்பாதையிலும் புதிய இல்லம் நல்லவிதமாக அடியெடுத்து வைக்கும் என்றும் இதனால் இல்லவாசிகளும் இல்லப் பணியாளர்களும் வலுப்பெறுவர் என்றும் திரு தேவேந்திரன் மேலும் கூறினார்.