இனத்தைக் குறிப்பிட்டு மாது ஒருவர் தாக்கப்பட்டதற்கு பிரதமர் லீ கண்டனம்

இனத்தைக் குறிப்பிட்டு மாது ஒருவர் தாக்கப்பட்டதற்கு பிரதமர் லீ கண்டனம்

2 mins read
cfbb3ed4-6222-49bb-9a1e-c6582f930698
கை முட்டியில் ஏற்பட்ட காயத்தை காட்டும் திருமதி நிட்டா. படம்: இந்தோசா நிட்டா விஷ்ணுபாய். -

சுவா சூ காங்கில் வேக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மாது ஒருவர் முகக்கவசம் அணியாததால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தமக்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் இனத்தைக் குறிப்பிட்டு அவர் தாக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

கொவிட்-19 சூழலில் மக்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தமக்குப் புரிகிறது என்றாலும், இனவாத தூற்றை யாராலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (மே 10) இரவு பதிவிட்ட பிரதமர் லீ, ஒருவர் குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத் துன்புறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சொன்னார்.

இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட அந்த 55 வயது மாது சிங்கப்பூர் இந்தியர்.

தனியார் துணைப்பாட ஆசிரியரான நிட்டா விஷ்ணுபாய் கடந்த வெள்ளிக்கிழமை சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து விளையாட்டரங்கத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்திய சிங்கப்பூரரான அவர், மூச்சுவிட சிரமமாக இருந்ததால் முகக்கவசத்தை மூக்குக்குக் கீழ் இறக்கியிருந்தார். அப்போது ஒரு பெண்ணுடன் வந்த நபர் அவரை நோக்கி சத்தம் போட்டார்.

"முகக்கவசத்தை மூக்குக்கு மேல்போடுமாறு அந்த நபர் கத்தினார். உடற்பயிற்சி செய்வதால் முகக்கவசத்தை இறக்கியிருக்கிறேன் என்று அவரிடம் பொறுமையாகக் கூறினேன்," என்றார் நிட்டா.

ஆனால் அதை தெரிந்தும் இருபது வயதுகளில் இருந்த அந்த ஆடவர் மீண்டும் சத்தம் போட்டார்.

"தகாத வார்த்தைகளைப் பேசினார். இன ரீதியில் அவர் தூற்றியதால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், 'கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்' என்று மட்டும் கூறி நகர்ந்துவிட்டேன். சில மீட்டர் தொலைவில் இருந்த அந்த நபர் ஆத்திரத்துடன் ஓடி வந்து என் மீது பறந்து எட்டி உதைத்தார். இதனால் நான் கீழே விழுந்துவிட்டேன்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நிட்டா கூறினார்.

கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அந்த நபருடன் இருந்த பெண்ணும் அவரை தடுத்து நிறுத்தவில்லை என்றார் நிட்டா.

அன்று நடந்த சம்பவத்தை கணவரிடமும் 26, 27 வயதில் உள்ள இரண்டு பிள்ளைகளிடமும் தெரிவித்த அவர், பின்னர் போலிசிடம் புகார் செய்தார்.

இதனை உறுதி செய்த போலிசாரும் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்