கட்டணம் செலுத்தி செய்தி வாசிக்கும் முறையால் தரமான செய்தித் துறையைப் பெற முடியும் என்று எஸ்பிஎச் மீடியாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு கோ பூன் வான் தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால் கூடுதலாகப் பகுப்பாய்வு செய்து செய்திகளை வெளியிடும் அவசியம் செய்தியாளர்களுக்கு ஏற்படும் என்றார் அவர். தரமான செய்திகளை வாசகர்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும் என்று திரு கோ கூறினார்.
மறுசீரமைப்புக்குப் பிறகு எஸ்பிஎச்சின் நாளிதழ்கள் தொடர்ந்து கட்டணம் செலுத்தி செய்தி வாசிக்கும் முறையைக் கடைப்
பிடிக்குமா என்பது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து திரு கோ இவ்வாறு பதிலளித்தார். இளம் தலைமுறையினரிடையே வித்தியாசமான பழக்கங்கள் இருப்பதாகவும் இலவசமாக வழங்கப்படும் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் அவர்களுக்கு இருப்பதை திரு கோ பலமுறை வலியுறுத்தினார். ஆனால் செய்திகளை இலவசமாக வழங்கினால் அவற்றை வாசகர்கள் திண்ணமாக வாசிப்பர் என்றாகிவிடாது என்றார் திரு கோ. எனவே, செய்திகள் தரமானவையாக இருந்தால் வாசகர்கள் கட்டணம் செலுத்தி அவற்றை வாசிக்க தயங்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார். சில நாடுகளில் உயர்மட்ட வர்க்கத்தினரைப் பிரதான வாடிக்கையாளர்களாகக் கொண்டு சில நாளிதழ்கள் செயல்படுகின்றன.
ஆனால் சிங்கப்பூரில் அனைத்துத் தரப்பினருக்காகவும் எஸ்பிஎச் மீடியா இயங்க வேண்டும் என்றார் அவர்.

