அரை மில்லியனுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் சிறுவர்கள், தங்கள் எடுசேவ் அல்லது உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்குகளில், 200 வெள்ளி தொகையை இந்த மாத இறுதிக்குள் பெறுவார்கள்.
ஏழு வயதுக்கும் இருபது வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 532,000 சிறுவர்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று நிதி அமைச்சும் கல்வி அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இது ஒரே முறை மட்டும் வழங்கப்படும் உதவித் தொகையாகும்.
பிள்ளைகளின் எடுசேவ் கணக்குகளில் அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் செலுத்தும் தொகையைத் தவிர்த்து தனியாக இத்தொகை வழங்கப்படுகிறது.
பிள்ளைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க, 2021 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவி தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதி யாக அந்த தொகை வழங்கப்படும்.
சிறுவர்களின் கணக்குகளில் நேரடியாக அத்தொகை செலுத்தப்படும் என்றும் அதனைப் பெற அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நிதி அமைச்சும் கல்வி அமைச்சும் தெரிவித்தன.
எடுசேவ், உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்குகளில் செலுத்தப்படும் தொகையை ஏற்கெனவே ஒப்புதல் பெற்ற கட்டணங்களுக்கும் செறிவூட்டல் வகுப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
தகுதிபெறுவோருக்கு, தொகை வழங்கப்பட்டதற்கான விவரங் களைக் கொண்ட கடிதங்கள் அனுப்பப்படும்.