ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையவுள்ள மேலும் இரண்டு ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் இந்த மாதத்தில் தொடங்கவுள்ளன.
ஜாலான் பூன் லேயில் உள்ள எண்டர்பிரைஸ் சாலை, ஜாலான் துக்காங் பகுதிகளில் அந்த ரயில் நிலையங்கள் கட்டப்படும். அதற்கு இன்னும் எட்டு ஆண்டுகள் பிடிக்கும்.
ஜூரோங் வட்டார ரயில்பாதையின் ஒரு பகுதியாகக் கட்டப்படும் அந்த நிலையங்கள் செயல்படத் தொடங்கும்போது ஜூரோங் தொழிலியல் பேட்டைக்குச் செல்வதற்கான பயண நேரம் கணிசமாகக் குறையும்.
எடுத்துக்காட்டாக, ஜூரோங் வட்டார ரயில்பாதையில் சுவா சூ காங் அவன்யூ 3லிருந்து ஜூரோங் டிராக்டர் ரோட்டுக்குச் செல்வதற்கான நேரம் தற்போதைய 50 நிமிடத்திலிருந்து 25 நிமிடமாகக் குறையும்.
இரண்டு நிலையங்களையும் கட்டுவதற்கான 241 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள குத்தகை சைனா ஹார்பர் (சிங்கப்பூர்) பொறியியல் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு அந்த நிறுவனம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள சிக்லாப் ரயில் நிலையத்தைக் கட்டி வருகிறது.
குத்தகையின் கீழ், இரண்டு ரயில் நிலையங்களையும் ஜூரோங் மத்தியப் பூங்கா, ஜாலான் பூன் லே ஆகியவற்றில் ரயில் பாதைக்கான மேம்பாலங்களையும் அந்த நிறுவனம் வடிவமைத்துக் கட்டும்.
கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலால் ரயில் நிலையக் கட்டுமானம் சுமார் ஓராண்டு தாமதானது.
அதனால் ரயில் நிலையங்கள் 2027ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.

