சாங்கி விமான நிலையத்தின் எல்லா பயணிகள் முனையங்களும் அதனை ஒட்டிய ஜுவல் கடைத்தொகுதியும் இன்று முதல் இரண்டு வாரங்களுக்குப் பொதுமக்களுக்கு மூடப்படும்.
பயணிகள் முனையங்களுக்குள் ஊழியர்கள் சிலரும் பயணிகளும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் ஜுவல் கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் விமான நிலையத்தில் நடைபெறும் வேளையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் விமானப்போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் இதனை நேற்று தெரிவித்தன.
கொவிட்19 சூழல் தொடர்ந்து மாறி வருவதால் தேவைப்பட்டால் அதற்கு ஏற்ப அதிகாரிகள் நடவடிக்கைகளை பரி சீலித்து மாற்றியமைப்பர். முனையங்களையும் ஜுவல் கடைத்தொகுதியையும் கூடுதல் காலத்துக்கு மூடுவதும் அதில் அடங்கும். சாங்கி விமான நிலையம் இக்காலக்கட்டத்தில் விமானப் பயணங்களுக்குத் திறந்திருக்கும் என்றும் பயணிகளை விமான நிலையத்தில் இறக்கி விடவும் அவர்களை அங்கிருந்து கூட்டிச் செல்லவும் முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலைய தொடர்பான கிருமித் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

