இந்து இளங்கோவன்
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கடந்த இரண்டு வாரங்களில் 3.2 மில்லியன் வெள்ளி நன்கொடையைத் திரட்டியுள்ளது.
சமூக அமைப்புகளும் பொது மக்களும் வழங்கிய இத்தொகை, அவசரமாகத் தேவைப்படும் மருத்துவச் சாதனங்கள், உயிர்வாயுக் கலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர பிரதேசம், புதுெடல்லி, கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ் நாடு ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் மருத்துவ முகாம்களுக்கும் இவை விநியோகிக்கப்படும்.
முதல் கட்டமாக, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கெனவே 1,300 உயிர்வாயு கலன்கள், உறைநிலையில் உயிர்வாயுவை வைத்திருப்பதற்கான மூன்று ராட்சத கொள்கலன்கள், ஐந்து சுவாசக் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
வரும் வாரங்களில், 4 மில்லியன் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள், 1.5 மில்லியன் N95 முகக் கவசங்கள், 2000 உயிர்வாயு உற்பத்திக் கருவிகள், 1200 உயிர் வாயுக் கலன்கள், 150 சுவாசக் கருவிகள் ஆகியவை கப்பலில் அனுப்பப்படும்.
இந்தியத் தொழிற்சாலைகளில் உயிர்வாயு உற்பத்திசெய்யப்பட்டாலும் அவற்றுக்கான கொள்கலன்கள் போதவில்லை. அதனால் சிங்கப்பூரிலிருந்து அக்கலன்களை இந்தியாவிற்கு கொண்டுசெல்ல ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் கூறினார் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு பெஞ்சமின் ஜெயராஜ் வில்லியம்.
"உயிர்வாயு கருவிகள், கலன்கள் போன்றவற்றுக்கான உலகளாவிய தேவை அதிகரித்திருப்பதால், ஆபத்தில் இருக்கும் இந்திய மக்களுக்கு உடனடியாகத் தேவைப் படும் மருத்துவ சாதனங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவுக்கான விமானச் சேவைகளும் குறைந்துள்ளன. கப்பலில் அனுப்பினால் அதிக காலம் பிடிப்பதால் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது" என்றார் திரு பெஞ்சமின்.
சுங்கத் துறை விதிமுறைகளும் முனையங்களிலிருந்து உரிய இடங்களுக்கு பொருட்களைச் சேர்ப்பதும் மற்ற சவால்கள் என்றாலும் தங்கள் பங்காளிகள் உதவி தேவைப்படும் இடங்களுக்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்த தொழில் சபை (சிக்கி), அனைத்து இந்திய நிர்வாகக் கல்விக் கழகங்கள், அனைத்து இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தி இண்டஸ் வர்த்தகர்கள், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஆகியவை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் சேர்ந்து நிதி திரட்டவும் மருத்துவப் பொருட்களை வாங்கி விநியோகிக்கவும் உதவி வருகின்றன.
"இத்திட்டத்தில் திரட்டிய தொகையைவிட இந்தியாவில் துடிக்கும் எத்தனை உயிர்களைக் காப்பாற்றுகிறோம் என்பதே முக்கியம்," என்றார் அனைத்து இந்திய நிர்வாகக் கழகத்தின் தலைவர் திரு சுரேஷ் ஷங்கர்.
செஞ்சிலுவைச் சங்கம்:
இணையத்தளம்: redcross.sg/indiacovid19response
காசோலை: 'Singapore Red Cross Society' என்ற பெயருக்கு காசோலையை எழுதி 'Red Cross House, 15 Penang Lane, Singapore 238486' எனும் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் பெயர், வீட்டு முகவரி ஆகியவற்றை எழுதி 'India COVID19 Response' என்று காசோலை பின்னால் குறிப்பிடவும்.
பேநவ்: (UEN): S86CC0370EFR2 எனும் கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பி 'India COVID19 Response' என்று அங்கும் குறிப்பிடவும்.
சிக்கி:
டிபிஎஸ் வங்கி கணக்கு எண்: 0720267338, அல்லது பேநவ் கணக்கு எண் (UEN): 193700026GIBD
கிவ்.ஏஷியா:
give.asia/covid19
எப்படி நன்கொடை வழங்குவது?