செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f0850474-8776-48e9-91f1-15706268daf8
-

தீப்பாதுகாப்புச் சான்றிதழைப் புதுப்பிக்காததால் அபராதம்

செல்லத்தக்க தீப்பாதுகாப்புச் சான்றிதழ் வைத்திராத ஆறு கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு $1,400 முதல் $2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தீப்பாதுகாப்புச் சட்டப் பிரிவு 20(2) விதிமுறையை ஒன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு மீறியதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதிக்கும் ஏப்ரல் 27ஆம் தேதிக்கும் இடையே அவர்கள் மீது நீதி மன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தீப்பாதுகாப்புச் சான்றிதழ் காலாவதியாவதற்கு இரு மாதங்களுக்கு முன்னரே அது குறித்து அந்தக் கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியப் படுத்தியதாகவும் பல நினைவூட்டல்களை அனுப்பியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆயினும், அவர்கள் தீப்பாதுகாப்புச் சான்றிதழைப் புதுப்பிக்கத் தவறினர்.

பத்தாண்டுகளில் எட்டாவது முறையாக குப்பையை வீசிய குற்றம் நிரூபணம்

மேலிருந்து குப்பையை வீசுவதை வழக்கமாகக் கொண்ட 49 வயது ஆடவர், இம்முறை சிகரெட் துண்டை வீசியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 7ஆம் தேதி பே சோ கோங் என்ற அந்த ஆடவருக்கு $3,600 அபராதம் விதிக்கப் பட்டதுடன், 12 மணி நேரம் சீர்திருத்தப் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் விதித்த அபராதத்தைக் கட்டத் தவறினால், அவர் பத்து நாள்களைச் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில், பே குப்பையை வீசிய குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு இருப்பது இது எட்டாவது முறை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று முன்தினம் ஒர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. சென்ற ஆண்டில் மட்டும் குப்பையை வீசிய குற்றங்களுக்காக 19,000 அழைப்பாணைகளை வழங்கியதாக வாரியம் கூறியது. சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ், குப்பையைப் போட்டுக் குற்றமிழைக்கும் ஒருவருக்கு $2,000வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாம் முறை அதே குற்றத்தைப் புரிந்தால் $4,000 வரையும் அதன்பிறகும் அதைத் தொடர்ந்தால் $10,000 வரையும் அபராதம் விதிக்கப் படலாம்.

இளையர் மரணம் தொடர்பில் மேலும் இருவர் மீது குற்றச்சாட்டு

இம்மாதம் 5ஆம் தேதி கிளமெண்டியிலுள்ள ஒரு வீட்டில் 19 வயது இளையர் மாண்டுகிடந்த சம்பவம் தொடர்பில் லிம் பெங் டியோங் எனும் 62 வயது ஆடவர் மீதும் சீ மெய் வான் எனும் 41 வயதுப் பெண் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குமாரி ஹுவாங் பௌயிங் என்ற அந்த இளம்பெண்ணை வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக, சம்பவத்திற்கு மறுநாள் அவரின் சகோதரர் ஹுவாங் போக்கன், 29, மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் மூவரும் மே 4ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஒரு மரத்தடியைக் கொண்டு குமாரி ஹுவாங்கைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.