இர்ஷாத் முஹம்மது
தாய், தந்தை, சகோதர சகோதரிகளின் குடும்பங்கள், பிள்ளைகள் என நோன்புப் பெருநாளை ஒரே வீட்டில் குதூகலமாகக் கொண்டாடுவதை அப்துல் அஜீஸ் யூசுஃப் வழக்கமாகக் கொண்டவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிக்லாப் பகுதியில் பெரிய பரப்பளவில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக வாழும் வீட்டில் வசிக்கத் தொடங்கியதும் ஒன்றாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இருப்பினும், சென்ற ஆண்டு நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்கும் அதிரடித் திட்டம் செயல்படுத்தப்பட்டதையடுத்து வீட்டில் தங்கியிருந்தவர்கள் மட்டுமே சேர்ந்து கொண்டாட முடிந்தது.
இந்த ஆண்டு ஐந்து பேர் வரை வீட்டிற்கு வரலாம் என்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து அப்துல் அஜீஸ், தம்முடைய இரு இளைய சகோதரர்கள் முஜிப் ரஹ்மான், முஹம்மது லுக்மான், தங்கை ஸாலினா யூசுஃப் ஆகியோரை வீட்டிற்கு அழைத்துப் பெற்றோருடன் கொண்டாடுகிறார்.
"சகோதர, சகோதரிகளின் குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடுவது சாத்தியமாகாது. இருந்தாலும் ஐவராவது வரலாம் என்ற நிலையில் இந்த நோன்புப் பெருநாள் மனம் நிறைவாக உள்ளது," என்றார் அப்துல் அஜீஸ்.
பெருநாளன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை மேற்கொண்டு அதன் பின்னர் தர்காவிற்குச் சென்று வருவது இந்தக் குடும்பத்தினரின் வழக்கம்.
பின்னர், அனைவரும் அப்துல் அஜீஸின் வீட்டிற்கு வருவர். தந்தை யூசுஃப் ஷாஹுல் ஹமீது, தாயார் ஃபாத்திமா ஷா இருவரிடமும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் மன்னிப்புக் கேட்டு தங்களின் பிழைகளைப் பொறுத்துக்கொள்ள கோரும் சிறப்பம்சம் இடம்பெறும்.
கொண்டாட்ட உணர்வில் அனைவரும் மூழ்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட பின் உணவருந்தி காலை வேளையைக் கடப்பார்கள். இன்றைய நோன்புப் பெருநாளுக்கு பள்ளிவாசல் சென்று தொழுகையை மேற்கொள்வதில் ஒரு மாற்றம்.
தங்கள் வீட்டிலேயே அனைவரும் கூடி, குடும்பமாகத் தொழுகையை மேற்கொள்கின்றனர்.
தற்போது நடப்பில் உள்ள பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளின்படி ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தொழுகை மேற்கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒரு நேரத்தில் 50 பேர் கொண்ட இரு குழுக்கள், அதாவது மொத்தம் 100 பேர் வரை மட்டுமே தொழக்கூடிய விதிமுறை உள்ளது.
பள்ளிவாசல்களில் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக அந்தத் தொழுகை இன்று காலை நடைபெறுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதற்கான முன்பதிவு தொடங்கி சற்று நேரத்தில் முடிவுற்றது. மொத்தம் 17,192 இடங்களே பெருநாள் தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட பட்சத்தில் பலர் தங்கள் இல்லங்களிலேயே குடும்பத்தாருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளனர்.
அந்த வரிசையில் இன்று வீட்டில் தொழுகையை நிறைவேற்றும் அப்துல் அஜீஸ், தமக்கு மனநிறைவளிக்கும் இந்த நோன்புப் பெருநாளுக்குக் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தமது நிறுவனமும் அதில் பணிபுரியும் ஊழியர்களும் காரணம் என்கிறார்.
ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
துப்புரவுத் துறையைச் சார்ந்த 'கிளீனிங் எஸ்ஸ்பிரஸ்' நிறுவனத்தை நடத்தி வருகிறார் திரு அப்துல் அஜீஸ் யூசுஃப்.
ஓராண்டுக்கும் மேலாக நோய்ப் பரவல் சூழலில் வாழ்ந்துவரும் நிலையில், முன்களப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் நிறுவனத்தின் ஊழியர்கள்.
கடந்த 1997ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் தந்தை யூசுஃப் ஷாஹுல் ஹமீது, 75. அதற்கு முன்னர் சிறிய அளவில் 1988ஆம் ஆண்டு இந்தத் துறையில் திரு யூசுஃப் காலடி எடுத்துவைத்தார். ஓய்வுபெற்று பேரப்பிள்ளைகளுடன் தம் நேரத்தைச் செலவிடும் திரு யூசுஃப், தம்முடைய நான்கு பிள்ளைகளிடமும் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்.
தமது மூத்த மகனான அப்துல் அஜீஸ், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இதர பிள்ளைகள் மற்ற பொறுப்புகளில் இருந்தவாறும் நிறுவனத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
ஏறத்தாழ 1,200 ஊழியர்களைக் கொண்டுள்ளது நிறுவனம். கிருமித்தொற்று சூழலின்போது நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஊழியர்களின் அயராத உழைப்புக்கும் சேவைக்கும் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது நிறுவனம்.
இதற்காகவே சுமார் $1 மில்லியன் ஒதுக்கியுள்ள நிறுவனம், மூன்று தவணைகளாக தொகையை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த நவம்பர், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த மே மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் முதல் இரண்டு தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. அடுத்து ஆக்ஸ்ட் மாதத்தில் இறுதித் தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
"உலகளாவிய அளவில் பரவிவரும் கொவிட்-19 கிருமித்தொற்று, கடந்த ஆண்டு சிங்கப்பூரை வெகுவாக பாதித்தது. அந்த காலகட்டத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், எங்கள் பணியின் முக்கிய அங்கமாக விளங்கியது.
"எல்லைகள் மூடப்பட்ட நிலையில் மலேசியாவில் தங்கி இங்கு வேலைக்கு வந்த எங்கள் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கான வசதியை ஏற்படுத்துவது ஒரு புறம் இருக்க, மேலும் சிலர் அங்கிருந்து வர முடியாமல் போனது. பிறகு இல்லத் தனிமை உத்தரவுக்கான செலவை ஏற்றுக்கொண்டு வந்தோம்," என்றார் திரு அப்துல் அஜீஸ்.
"நீண்ட நேரத்திற்குப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பள்ளிக்கூடங்கள், கடைத்தொகுதிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தூய்மையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் பெரும் பொறுப்பும் ஊழியர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஊழியர்கள் தன்னலமற்ற வகையில் தங்களின் வேலையைச் செய்ததற்கு எங்கள் நிறுவனம் வழங்கும் சிறிய அன்பளிப்பே இந்த ஊக்கத்தொகை," என்றார் அவர்.
துப்புரவுச் சேவையுடன் நிலவனப்புச் சேவை, பூச்சி கட்டுப்பாட்டுச் சேவை போன்றவற்றையும் வழங்குகிறது அந்தக் குழுமம். மூத்த ஊழியர்களைப் பார்த்துக் கொள்வது முதல் துறைசார் நிலைகளையும் ஊழியர் நலனையும் மேம்படுத்த நிறுவனம் எடுத்துள்ள முயற்சிகள், பங்களிப்புகளுக்காக இவ்வாண்டின் மே தின விருது பாராட்டுப் பதக்கம் (Medal of Commendation) திரு அப்துல் அஜீஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
"இந்த விருதை நான் தன்னடக்கத்துடன் பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விருதை நான் அர்ப்பணிக்கிறேன். மாற்றங்களையும் சவால்களையும் கடந்து வர்த்தகம் சீராக நடைபெற தோதாக உள்ள அவர்களின் உழைப்பு பாராட்டிற்குரியது. அவர்கள் இல்லாமல் இந்த விருது எனக்குக் கிடைத்திருக்காது. உளப்பூர்வமாக தொடர்ந்து சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விருது எனக்கு ஒரு நினைவூட்டலாக திகழ்கிறது," என்றார் அவர்.
கட்டுப்பாடுகள் இருந்தும் மனநிறைவே
புனித ரமலான் மாதம் முழுதும் நோன்பு வைத்து, அந்த மாதம் முழுதும் கொடை உள்ளத்துடனும் இறை நம்பிக்கையுடனும் இருந்து, ஏழை எளியவர்களுக்கு நன்கொடைகள் வழங்கி, நல்ல சேவைகளைச் செய்வது என்ற நிலையில் நோன்புப் பெருநாள் எனும் ஈகைத் திருநாளை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் திரு அப்துல் அஜீஸ்.
"பிள்ளைகள் தாத்தா, பாட்டியுடன் மகிழ்ச்சியாக இந்த நாளைக் கொண்டாடுவது முக்கிய நோக்கம்.
"செய்த தவறுகளுக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு நற்குணத்துடன் இருப்பதும் முக்கியம்.
"தொன்றுதொட்டு நாம் பின்பற்றி வரும் பழக்கவழக்கங்களை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியதும் அவசியம்," என்றார் அவர்.
நோய்ப் பரவல் சூழல் ஏற்படுத்தும் சவால்களை அமைதியாகவும் கவனமாகவும் கடந்து, மகிழ்ச்சி பொங்க இவ்வாண்டின் நோன்புப் பெருநாளை அனைவரும் கொண்டாடலாம் என்று புன்னகையுடன் தெரிவித்தார் திரு அப்துல் அஜீஸ்.
"சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் நம்மால் சற்று சிறப்பாகவே நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடிகிறது. அந்த வகையில் அனைவரும் மனநிறைவு பெறவேண்டும்.
"வரும் காலங்களில் நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பவேண்டும் என்று அனைவரையும் போல நானும் இந்த நோன்புப் பெருநாள் வேண்டுகிறேன்," என்றார் அவர்.

