இந்து இளங்கோவன்
பசி, தாகத்தைப் போக்க இயலாமல் வாடும் ஏழை எளியவர் படும் துன்பத்தை உணர்ந்து, உதவி வழங்குவதே புனித ரமலான் மாத நோன்பின் நோக்கம். இதைத் தங்கள் கொள்கையாகக் கடைப்பிடிக்கும் வகையில், 47 இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 'புராக்' (Buraaq) என்னும் குழுவைத் தொடங்கினர்.
சமையலுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை, குவீன்ஸ்வே வட்டார வாடகை வீடுகளில் வசிக்கும் 250 வசதிகுறைந்த குடும்பங்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று அவர்கள் விநியோகம் செய்தனர்.
சமூக ஊடகத் தளங்களின் உதவியோடு நண்பர்கள், உறவினர்கள், 'புராக்' உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. $30 மதிப்பிலான சமையல் பொருட்களை ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று கொடுத்தனர் 'புராக்' குழுவினர்.
'புராக்' குழு, 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சேர்ந்து வெளிநாடுகளுக்கு தங்களின் வண்டிகளில் செல்வதற்கான தளமாக அது இருந்தது.
கொவிட்-19 தொற்றுக்காலம் தொடங்கியதிலிருந்து உதவி தேவைப்படுவோருக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை குழு உறுப்பினர்கள் பின்னர் வளர்த்துக்கொண்டனர்.
வியாழக்கிழமைகளில் 'புராக்' உறுப்பினர்கள் சந்தித்துக்கொண்டு குழுவின் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவர். அவ்வாறு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில்தான் இந்த ரமலான் உணவு விநியோக அறப்பணி யோசனை உதித்தது.
"நம்மில் பலர் பொதுவாக இந்தியா போன்ற பிற நாடுகளில் அவதிப்படுவோருக்கு முன்வந்து உதவுவோம். சிங்கப்பூரில் உள்ளவர்கள் அந்த அளவிற்கு வசதி இல்லாமல் அவதிப்படுவதில்லை என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது. ஆனால் இந்த தொண்டூழியத்தில் ஈடுபட்ட பின்புதான் சிங்கப்பூரிலேயே அதிகஅளவு உதவி தேவைப்படுவோர் பலர் இருக்கின்றனர் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்.
"நாங்கள் உணவு விநியோகம் செய்ய சென்றபோது 'எங்களுக்கும் கொடுங்கள்' என்று சில வயதானவர்களும் சிறு பிள்ளைகளும் பரிதாபமாக கேட்டு நின்றது இப்பொழுதும் கண்முன் நிற்கிறது. மிகச் சிறிய வாடகை வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதைக்கூட பார்த்தோம். இக்காட்சிகள் எங்கள் மனதை நெகிழ வைத்தன. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது இதுபோன்ற தொண்டு செய்யவேண்டும் என்ற உத்வேகம் எங்களுக்குப் பிறந்துள்ளது," என்றார் 'புராக்' குழுவின் தலைவர் முகம்மது ஸுபேர்.
அரிசி, பால், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்ட பொட்டலங்களைக் குடும்பங்களுக்காக தயார்செய்த பின் மீதமிருந்த பணத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியது 'புராக்'.
"திட்டத்தின் தொடக்கத்தில் வசதிகுறைந்த வீடுகளுக்குச் சமைத்த உணவுப் பொட்டலங்களை வழங்கலாம் என்ற யோசனை இருந்தது. ஆனால் சமைத்த உணவு வழங்கினால் ஒரு நாளில் தீர்ந்துவிடும். சமையலுக்கான பொருட்களை வழங்கினால் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவை அவர்கள் சமைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.
"தோழமை, தொண்டு அறச்செயல்களால் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம்," என்று கூறினார் 'புராக்' குழு உறுப்பினர் முகம்மது யாக்கோப்.

