உணவு சாப்பிடும்போது மனைவியின் சக்கர நாற்காலிக்கு ஏற்ற ஒரு மேசை இருந்தால் போதும் என்று விரும்பினார் 53 வயது முகம்மது அனிஸ் ஆதம். அவரது ஆசை நிறைவேறியதுடன் இந்த நோன்புப் பெருநாளுக்கு அவர்களது வீட்டுக்கே ஒரு புதுப்பொலிவு கிடைத்துள்ளது. முன்னாள் போதைப்பொருள் புழங்கிகளுக்கான மறுவாழ்வு நிலையமானது 'ஜாமியா இடைநிலை இல்லம்'. இல்லவாசிகள் அறுவர் சேர்ந்து திரு அனிசின் வீட்டுக்கு இவ்வாறு புதுப்பொலிவு தந்துள்ளனர். இதற்கான $2,500 செலவை இல்லம் ஏற்றது.
தம்பதிக்கு 16, 18 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
திரு அனிசின் மனைவி, 52 வயது திருவாட்டி ஷஸ்லின் ஹசான், 2016ல் ஏற்பட்ட பக்கவாதத்தால் சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலை. குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் ஒரே நபர் திரு அனிஸ்.
குறைந்த வருமானப் பிரிவினருக்காக 2019ல் தொடங்கப்பட்ட 'புரோஜெக்ட் ஹேப்பினஸ் 2.0' எனும் சமூகத்தைச் சென்றடையும் திட்டத்தின் மூலம் இதுவரை ஒன்பது குடும்பங்கள் பலனடைந்துள்ளன. தீபாவளி, கிறிஸ்மஸ், சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் என விழாக்காலங்களின்போது தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத்தாருக்கு இத்தகைய உதவிகளை இல்லம் வழங்கி வருகிறது.

