மொழிபெயர்ப்பு: கூடுதல் ஆதரவு

மொழிபெயர்ப்பு: கூடுதல் ஆதரவு

3 mins read
74364fb5-9a49-4d66-9f4c-0075520a13fc
-

மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்பு, தகவல் அமைச்சு மேம்படுத்தியுள்ளது. இதனால் இத்திட்டத்துக்கு கூடுதல் மொழிபெயர்ப்பாளர்கள் தகுதிபெறுகின்றனர்.

இத்திட்டம் மூலம் வழங்கப்படும் மானியத்தை இவ்வாண்டு பெறுபர்களுக்கு முன்பைவிட ஐந்து விழுக்காடு கூடுதலாக நிதியுதவி கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 1ஆம் தேதியன்று தொடங்கியது. விண்ணப்பத்துக்கான இறுதி நாள் ஜூன் 30. www.mci.gov.sg/ttds இணையப்பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் உள்ளூர் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய் சேர்க்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பில் குறைந்தது ஓராண்டு அனுபவம் உள்ள, பணியில் நன்கு செயல்படும் தனியார் துறை ஊழியர்களும் இத்திட்டத்தில் பங்கெடுக்கலாம்.

கொவிட்-19 சூழலில் மொழி பெயர்ப்பாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மானியம் பெறுபவர்களுக்குத் தலா 95% உதவித்தொகையுடன் அதிகபட்சம் $10,000 வழங்கப்படும்.

இதற்கு முன்பு திட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு மொழிபெயர்ப்பு தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கான செலவில் 90% உதவித் தொகை மட்டுமே வழங்கப்பட்டது.

திட்டத்துக்குத் தகுதி பெறுபவர்கள், வழங்கப்படும் மானியத்தைப் பயன்படுத்தி உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் நடத்தப்படும் திட்டங்களில் பங்கெடுக்கலாம்.

குறுகிய காலப் பயிற்சிகள், பயிலரங்குகள், பட்டயச் சான்றிதழ் கல்வி, இளங்கலைப் பட்டக் கல்வி, முதுகலைப் பட்டக் கல்வி, முனைவர் பட்டக் கல்வி, மாநாடுகள், கருத்துரங்குகள், இணையம் மூலம் நடத்தப்படும் கருத்தரங்குகள், சான்றிதழ் வழங்கும் தேர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

விண்ணப்பத்தாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் பங்கெடுக்கலாம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் இந்தத் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மானியத்தை அவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

ஓராண்டு வரையிலான பயிற்சி களுக்கு இவ்வாண்டு விண்ணப்பம் செய்பவர்கள் கடந்த ஏப்ரல் மாதத்துக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தங்கள் பயிற்சி களைத் தொடங்கி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஓராண்டுக்கும் மேலான பயிற்சிகளை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மொத்தம் 20 மொழி பெயர்ப்பாளர்கள் அதில் பங்கெடுத்துப் பலனடைந்துள்ளனர். சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்த திட்டத்தில் பங்கெடுப்போரின் அர்ப்பணிப்பை மானியம் அடையாளம் காண்பதாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சரும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான சிம் ஆன் தெரிவித்தார். தாய்மொழியில் பேச, படிக்க விரும்புவோரையும் சமூகத்துடன் உள்ளடக்க மொழிபெயர்ப்புத் துறையினருக்குப் பெரும் பங்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

"மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2018ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து தங்கள் மொழிபெயர்ப்புத் திறனை மேம் படுத்திக்கொள்ள விரும்புவோருக்கு நாங்கள் உதவிக்கரம் நீட்டி வருகிறோம்.

"சிங்கப்பூரின் மொழிபெயர்ப்புத் துறையை இவர்கள் பலப்படுத்துவர் என நாங்கள் நம்புகிறோம். மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் திறமையுள்ள மேலும் பலருக்கு ஆதரவு வழங்க முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மொழிபெயர்ப்பு, மொழிகள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும் என விரும்புகிறோம்," என்று திருவாட்டி சிம் ஆன் தெரிவித்தார்.

மானியம் பெற விண்ணப்பம் செய்பவர்கள் ஆங்கிலம்-சீனம் அல்லது ஆங்கிம்-மலாய், அல்லது ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர் களாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் அமைப்பில் முழுநேர ஊழியராக இருப்பவர்கள், வேறு துறை அல்லது வர்த்தகத்தில் இருந்தும் வேலை நிமித்தமாக அடிக்கடி மொழிபெயர்ப்பு செய்பவர்கள், சுயதொழில் அடிப்படையில் வேறு ஊழியர்களை வேலையில் அமர்த்தாமல் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.