பொதுமக்களுக்கு சாங்கி விமான நிலையம் மூடப்பட்ட முதல் நாள்
பொதுமக்களுக்கு முதல் நாளாக மூடப்பட்ட சாங்கி விமான நிலையம், நேற்று அமைதியே உருவமாகக் காணப்பட்டது. தங்களின் கொவிட்-19 சோதனைகளுக்காக விமான நிலைய ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 'ஜூவல்' மூடப்படுதல், முனையங்களுக்குள் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுதல் போன்றவற்றைப் பற்றி அறியாமல் வந்திருந்த பொதுமக்களுக்கும் ஏமாற்றம்.
நேற்று முதல் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு விமான நிலையத்தின் முனையக் கட்டடங்களுக்குள் ஒரு சில ஊழியர்களும் பயணிகளுமே அனுமதிக்கப்படுவர் என்று நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்), சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி) இரண்டும் அறிவித்திருந்தன.
இந்த இரண்டு வாரங்களில் ஜூவலும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத் துப்புரவாளர் ஒருவரிடம் தென்பட்ட கிருமித்தொற்று காரணமாக தினமும் பதிவாகிய புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் பெருமளவிலான கொவிட்-19 சோதனைகள் நடத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். இதற்கு இந்த மூடல் அவசியமானது.
நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்வதுடன் தேவை ஏற்பட்டால் மாற்றமும் செய்யும் என சிஏஏஎஸ் மற்றும் சிஏஜி தெரிவித்தன. இதன்படி, பொதுமக்களுக்கு மூடப்படும் காலகட்டம் அதிகரிக்கக்கூடும்.
ஜூவலுடன் முனையம் மூன்றை இணைக்கும் பாலத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். அட்டைகளுடைய ஊழியர்கள் மட்டுமே பாலத்தைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
நிலத்தடி பேருந்து நிறுத்தங்கள் மூலம் வழக்கமாக முனையம் ஒன்று மற்றும் மூன்றுக்குள் நுழையும் வழிகளும் மூடப்பட்டன. பொதுமக்களுக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புகள் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்தன. வருகையாளர் அட்டை அலுவலகம் மூலமாக மட்டுமே விமான நிலையத்திற்கும் செல்ல முடியும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே விமான நிலைய ஊழியர்கள் சிலர் குழப்பத்தில் காணப்பட்டனர். முனையம் மூன்றின் பேருந்து இடத்திற்கு வழக்கமாகச் செல்லும் வழியில் அமைந்த கதவுகள் மூடப்பட்டன.
தங்களின் கொவிட்-19 சோதனைகளுக்கு வந்திருந்த ஊழியர்கள் செய்வதறியாது நின்றனர்.
பேருந்துப் பயணம் வழியாக விமான நிலையத்தை அடைந்த ஒரு சில ஊழியர்களும் உள்ளே வர முடியாமல் கதவுகளுக்கு வெளியே காத்திருந்தனர். எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்ல விரும்பிய ஓர் ஊழியர், இதேபோல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
எம்ஆர்டி நிலையத்திலிருந்து மின்படிகளில் வந்தவர்கள், விமான நிலைய அதிகாரிகளால் நிறுத்தப்பட்டனர். ஊழியர்கள் அல்லது பயணிகள் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

