கடந்த ஆறு நாட்களில் புதிதாக உறுதிசெய்யப்பட்ட கொவிட்-19 நோயாளிகளில் ஒன்பது பேர், உடல்நலமில்லாத நிலையிலும் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை. இதற்கிடையே அடுத்த சில வாரங்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டம் என்கின்றனர் நிபுணர்கள்.
கொவிட்-19 நிலவரம் குறித்து செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், 'சிங்கப்பூர் கத்திமுனையில் உள்ளது' என்றார். நிபுணர்களும் அதையே சொல்கிறார்கள். புதன்கிழமை நிலவரப்படி இங்கு 12 தொற்றுக் குழுமங்கள் உருவாகிவிட்டன. கடந்த ஒரு வாரத்தில் பதிவான சமூகத் தொற்று சம்பவங்களில், தொடர்புகள் கண்டறியப்படாத நிலையில் 12 சம்பவங்கள் உள்ளன.
"நிலைமையை நேரடியாக அணுகக்கூடிய ஒரு முறை முடக்கநிலையே. ஆனால் தொடர்புகள் கண்டறியப்படாத கொவிட்-19 சம்பவங்கள், புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் தொடர்ந்து உருவாகும்போது, முடக்கநிலை தேவைப்படலாம். ஒரு சமூகமாக நாம் இப்போதே செயல்பட்டு அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடிய கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிடலாம்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டேல் ஃபிஷர்.
அதிகரிக்கும் கிருமித்தொற்று சம்பவங்களையும் தொற்றுக் குழுமங்களையும் கட்டுப்படுத்துவது ஒன்று. இரண்டாவது முறையாக கிருமி அதிரடி முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாவது மற்றொன்று. இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போதைய கொவிட்-19 நிலவரம், எந்நேரத்திலும் சிங்கப்பூரர்களுக்கு மேலும் சாதகமில்லாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது, முதல் முறை அல்ல என்றார் என்யுஎஸ் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஹானா கிலெப்ஹேம்.
"துரிதமான, பயனுள்ள வகையில் செயல்பட்டதால் சமூகத்தில் பெருமளவு கிருமிப் பரவல் ஏற்படவில்லை. ஆனால் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் இந்நிலை இன்னும் வரவில்லை. இனியும் வரலாம். அது நடக்காமல் இருக்கவே கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன," என்றார் அவர்.
தொற்று அறிகுறிகள் இருந்தும் மருத்துவரை அணுகவில்லை
கொரோனா கிருமித்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தங்களுக்கு ஏற்பட்டும், ஒன்பது கொவிட்-19 நோயாளிகள் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை. தமக்கு ஏற்பட்ட இருமல் மிக மோசமான பின்னரே மூன்று வாரங்கள் கழித்து ஒரு நோயாளி, மருத்துவரை அணுகினார்.
"தொடர்புகளின் தடமறிய கொவிட்-19 நோயாளிகளை விரைந்து அடையாளம் காண்பது முக்கியம். மேலும் பலர் பாதிக்கப்படுவதைத் தடுத்துத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இதர நடவடிக்கைகளையும் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்," என்று விவரித்தார் டாக்டர் கிலெப்ஹேம்.
வாய்ப்பு வழங்கப்படும்போது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள் என்றார் பேராசிரியர் ஃபிஷர்.
"அடுத்த சில வாரங்களுக்கு வெளியே செல்வதைக் குறைத்துக்கொண்டாலே நம்மால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மீண்டும் அதிரடி கிருமி முறியடிப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை எவரும் விரும்புவதில்லை. ஆனால், தேவை ஏற்பட்டால் அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தத் தயங்காது என்பதையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும்," என்றார் அவர்.

