சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைமை இயக்குநராக திரு ஹான் கொக் ஜுவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியிலிருந்து அவர் இப்பதவியை வகிப்பார்.
47 வயது திரு ஹான், தற்போது போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளராகவும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைமை இயக்குநராகவும் பதவி வகிக்கிறார்.
வரும் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவர் அவரது அதிகாரபூர்வ பதவியேற்புக்கு முன்பு ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை இயக்குநர் என்ற முறையில் செயல்படுவார்.
50 வயது திரு கெவின் ஷுமுக்குப் பதிலாக திரு ஹான் தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்கிறார்.
திரு ஷும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியிலிருந்து ஆணையத்தின் தலைமை இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார்.
திரு ஹான் தற்போது வகிக்கும் போக்குரவரத்து அமைச்சின் துணைச் செயலாளர் பதவியை திரு ஷும் ஏற்கவிருக்கிறார்.
போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை திரு ஹான் சட்ட அமைச்சின் துணைச் செயலாளராகப் பதவி வகித்தார்.

