கொவிட்-19 சூழல் காரணமாக பிடிஓ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானம் தாமதம் அடைந்ததைத் தொடர்ந்து, இடைக்கால வீவக வாடகை வீடுகளுக்கான தேவை கடந்த ஆண்டு அதிகரித்துவிட்டது.
பிபிஎச்எஸ் எனப்படும் பெற்றோர்பருவ தற்காலிக வீடமைப்புத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்கு 2,350 விண்ணப்பங்கள் வந்தன. அதற்கு முந்திய ஆண்டான 2019ல் இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,370 ஆக இருந்தது. இந்த விவரங்களை தேசிய வளர்ச்சி அைமச்சு கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதிலில் குறிப்பிட்டு இருந்தது.
2,350 விண்ணப்பங்கள் வந்தபோதிலும் கடந்த ஆண்டு பிபிஎச்எஸ் திட்டத்தின் கீழ் வழங்க 160 வீடுகள் மட்டுமே காலியாக இருந்தன.
அதனால் விண்ணப்பித்த பெரும் பாலானோருக்கு வீடு கிடைக்கவில்லை.
புதிய பிடிஓ வீடுகளை வாங்கியோர் அந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இடைக்காலத்தில் தங்கி இருக்க பிபிஎச்எஸ் திட்டம் கைகொடுக்கிறது. அதற்கான வீடுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படுகின்றன. இத்தகைய வீடுகளுக்கான வாடகை அறைகளையும் இடங்களையும் பொறுத்து வேறுபடுகிறது.
மார்சிலிங் பகுதியில் ஈரறை வீட்டின் வாடகை $400. அதே
நேரம் ஹவ்காங்கில் மூவறை வீட்டின் வாடகை $600. தியோங் பாரு வட்டார நான்கறை வீட்டிற்கான இடைக்கால வாடகை $1,500.
இந்த வீடுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்த அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 40 விழுக்காட்டினர் வீட்டைத் தேர்வு செய்ய வருவதில்லை என்று அமைச்சு தெரிவித்தது. எல்லா விண்ணப்பதாரர்களுக்குமே உடனடியாக வீடு தேைவப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது அவர்கள் வேறு தெரிவுகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்றது அமைச்சு.
தற்போது சிங்கப்பூர் முழுவதும் 110 ஈரறை வீடுகள், 570 மூவறை வீடுகள், 60 நான்கறை வீடுகள் பிபிஎச்எஸ் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ளன.
தற்காலிக வீடு தேவைப்படும் குடும்பங்களுக்கு அதிகத் தெரிவுகளையும் சீரான விநியோகத்தையும் நோக்கிச் செயல்பட்டு வரு
வதாக வீவக தெரிவித்தது. பிடிஓ கட்டுமானத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் இத்தகைய வீடுகளுக்கான தேவையை அதிகரித்துவிட்டது. தற்போது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 89 திட்டங்களில் கிட்டத்தட்ட 85 விழுக்காடு ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையிலான தாமதத்தைச் சந்தித்தன. அதன் காரணமாக 43,000 குடும் பங்கள் பாதிப்புக்குள்ளாயின.

