பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் மற்றவர்களின் இன உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் 47 வயது ஆடவர் ஒருவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாசிர் ரிஸ் கடற்கரை பூங்காவில் மே 2ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுவதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அன்றைய தினம் மாலை 6 மணியளவில் இந்திய குடும்பம் ஒன்றை நோக்கி தகாத வார்த்தை களை அவர் உச்சரித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறிக்கை கூறியது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் முகக்கவசம் அணியாததைச் சுட்டிக்காட்டி அவர் அவ்வாறு நடந்துகொண்டாராம். விசாரணையில் ஆடவர் ஒத்துழைப்பு அளித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் குற்றத்திற்கு மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை, $2,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
மற்றவர்களின் இன உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தகாத வார்த்தைகளை உச்சரிக்கும் குற்றத்திற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, $5,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் போலிஸ் கடுமையாக எடுத்துக்கொள்ளும் என அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை 30 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சுவா சூ காங் டிரைவில் 55 வயது இந்திய மாது ஒருவரிடம் அவர் இந்தக் குற்றங்களை புரிந்ததாக போலிசின் விசாரணையில் தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் பேசினார்.

