மக்கள் கவிஞர் மன்றத்தின் 17ஆம் ஆண்டு தொழிலாளர் தின விழாவில் புதுமை. திரையுலகில் தமது பாடல் வரிகளால் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் கவிஞரின் வரிகளான "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பாடல் வரிகள் தொழிலாளர் தினப் பாடலாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது.
இதையடுத்து மக்கள் கவிஞர் மன்றத்தின் தலைவர் தமது உரையில் யாவரையும் வரவேற்று பேசிவிட்டு மன்றத்தின் தொடர்ந்த செயல்பாடு கள் பற்றி கூறினார்.
தமிழ்த் திரையுலகில் தமது பாடல் வரிகளால் புதிய மாற்றம் செய்த மக்கள் கவிஞருக்கு விழா எடுக்கையில் திரைப்படங்களைவிட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களைப் பற்றி சிறப்புரையாற்றத் தகுதி வாய்ந்தவரான நிழல் அரசு இவ்விழாவில் இணைந்துள்ளதை பெருமையாக கருதுவதாகக் கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மன்றத்தின் துணைச் செயலாளர், சிறப்புரையாற்றும் திரு நிழல் அரசுவை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நவீன சினிமாவுக்கான களமாக தமிழகத்திலிருந்து வெளி வரும் "நிழல்" காலாண்டிதழின் ஆசிரியரும் நிழல் - பதியம் என்ற திரையுலகத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நிறுவனருமான நிழல் திருநாவுக்கரசு சிறப்புரை ஆற்றினார்.
'குறும்படங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் திரு நிழல் அரசு தமது சிறப்புரையில், "சிறுகதைக்கு என்ன இலக்கணமோ அதுதான் குறும்படங்களுக்கும். 2 மணி நேர முழுநீள வர்த்தக சினிமா, சமூகத்தில் தராத தாக்கத்தை 10 நிமிட குறும்படங்கள் ஏற்படுத்தும்," என்ற அவர் கூறினார்.
மேலும் An Occarance At Owel Creek Bridge, அகல்யா, மலேசியாவின் "மடமைக்கு அஞ்சேல்", தமிழகத்தின் "மீனா", சிங்கப்பூரின் "டார்க் லைட்" போன்ற 5 குறும்படங்களைப் பற்றி பேசினார்
தொடர்ந்து இறுதி மூன்று படங்களின் இயக்குநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதையடுத்து கேள்வி பதில் அங்கத்தில் பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்.
இறுதியில், மன்றத்தின் செயலாளர் நன்றியுரையாற்றினார்.

