சிங்கப்பூரில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 24 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள்.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் நால்வருக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை. 13 பேர் சாங்கி விமானநிலைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
எஞ்சிய ஏழு பேரும் முன்பு கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 16 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 28 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த அந்த 28 பேரில் 19 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிதாக நேற்று யாருக்கும் தொற்று இல்லை.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 61,505 ஆக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமையன்றும் சமூகத்தில் புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சு அறிவித்தது. அவர்களில் நால்வர் வேறு யாருடனும் தொடர்பில்லாதவர்கள். அந்த நால்வரில் துணைப்பாட ஆசிரியர், இரண்டு வெளிநாட்டுப் பணிப்பெண்கள், ஒருவர் குடும்ப மாது அடங்குவர்.
வியாழக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களில் பலரும் சாங்கி விமான நிலைய முனையம் 3க்குச் சென்று வந்தவர்கள்.

