செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a114400a-3362-4bc3-ad2a-b7af8924a6ac
-

விமான நிலையம் சென்று வந்தோருக்கு இலவச பரிசோதனை

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3க்கு மே 1ஆம் தேதி முதல் யாராவது சென்று வந்திருந்தால் அவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 பரிசோதனை வாய்ப்பு கொடுக்கப் படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. சாங்கி விமான நிலையத் தொற்றுக் குழுமத்தில் 59 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே முனையம் 1ல் அல்லது 3ல் வேலை பார்த்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்தவர்கள். பரிசோதனைக்கு எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் படிப்படியாக குறுஞ்செய்தி மூலம் அமைச்சு தகவல் தெரிவிக்கும். மே 1ஆம் தேதிக்குப் பிறகு சாங்கி விமான நிலையம் முனையம் 1க்குச் சென்று இருப்போர், தாங்கள் சென்ற நாளில் இருந்து 14 நாட்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வரவேண்டும் என்று அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

டான் டோக் செங் தொற்று குழுமத்தில் மேலும் ஒருவர்

டான் டோக் செங் மருத்துவமனை தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய புதிய சமூகத்தொற்றுச் சம்பவம் ஒன்று நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த நோயாளி தனிமையில் வைக்கப்பட்டு இருந்தபோது அவருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் நேற்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

டான் டோக் செங் மருத்துவமனை தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை இரவு நிலவரப்படி 44 பேராக இருந்தது.

அந்தக் குழுமத்தில் மேலும் யாருக்காவது தொற்று இருப்பதாகத் தெரியவில்லை என்றால் மருத்துவமனையை அடுத்த சில வாரங்களுக்குள் வழக்கமான நிலைக்குக் கட்டம் கட்டமாக எப்படி கொண்டு வரலாம் என்பது பற்றி ஆராயப்படும் என்றார் அவர்.

மருத்துவமனையில் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஏறத்தாழ 28,000 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.