கொவிட்-19 கிருமி தொற்றிய சாங்கி விமான நிலைய ஊழியர்கள் பெரும்பாலும், தெற்கு ஆசியா உட்பட அதிக தொற்று அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இருந்த ஒரு பகுதியில் பணியாற்றியவர்கள்.
விமான நிலையத்தில் ஏற்பட்ட முதல் சுமார் 20 கிருமித்தொற்றுச் சம்பவங்களை ஆராய்ந்த பின்னர் அங்குள்ள அதிகாரிகள் இதை அடையாளங்கண்டனர்.
கொவிட்-19 தொடர்பான மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நேற்றைய செய்தியாளர் கூட்டத்தின்போது, போக்குவரத்து அமைச்சர் திரு ஓங் யி காங் அதனைத் தெரிவித்தார்.
பயணிகள் தாண்டிச் செல்லக் கூடிய குடிநுழைவுப் பகுதி, பயணப் பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் இடம் ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் திரு ஓங்.
டான் டோக் செங் மருத்துவமனை சிகிச்சைப் பிரிவு 9Dயில் இருந்து எவ்வாறு கொவிட் கிருமி பரவியதோ, அதைப் போலவே விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து கிருமித்தொற்றுபரவியுள்ளது.
கொவிட்-19 தொற்று அதிகம் ஏற்பட்ட அந்த பகுதியிலிருந்துதான் ஊழியர்கள் 3ஆம் முனையத்தில் உள்ள இரண்டாம் அடித்தளத்தில் உள்ள கடைகளுக்கும் உணவங்காடிக்கும் செல்வார்கள்.
இரண்டாம் அடித்தளத்துக்குச் சென்ற பொதுமக்களுக்கும் கிருமி தொற்றி இருக்கக்கூடும் என அதிகாரிகள் கருதுவதாக திரு ஓங் கூறினார்.
மே 8 அன்று அறிவிக்கப்பட்ட சமூக அளவிலான தொற்றுகளில் 18 வயது விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்.
அவர் சாங்கி விமான நிலைய 3ஆம் முனையத்தின் இரண்டாம் அடித் தளத்தில் உள்ள கோப்பித்தியாம் உணவங்காடிக் கடைக்குச் சென்றதாக பின்னர் தெரிய வந்தது.
அடுத்த நாள், மூன்றாம் முனையத்தின் இரண்டாம் அடித்தளத்தில் கடைகள் அமைந்திருக்கும் முழுப் பகுதியும் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக திரு ஓங் தெரிவித்தார்.
விமான நிலையம் அதன் பிறகு தனது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. அதன் பகுதிகள், வெவ்வேறு தொற்று அபாய அளவுகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. தொற்று அபாயம் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தொற்று அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் பணியாற்றுபவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளையும் கவசங்களையும் அணிய வேண்டும்.
அத்துடன், அந்த இடங்களுக்குள்ளே உணவு சாப்பிட வேண்டும். உணவுக்காக அவர்கள் மற்ற பகுதி களுக்குச் செல்ல முடியாது.
கிருமி தொற்றிய ஊழியர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளனர்
இதுவரை, 28 விமான நிலைய ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் 19 பேர் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
அவர்கள் அனைவரது உடல்நிலையும் நன்றாய் இருப்பதாகவும் உயிர்வாயுவின் உதவி இல்லாமல் அவர்கள் சுவாசித்து வருவதாகவும் திரு ஓங் தெரிவித்தார்.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள தொற்றுக் குழுமம், ஊழியர்களுக்கு இடையே மட்டும் பரவியுள்ள குழுமமாக இருக்கும் என்று திரு ஓங் நம்பிக்கை தெரிவித்தார்.
"துறைமுகத்திலும் டான் டோக் செங் மருத்துவமனையிலும் செய்துள்ளதைப் போல, தனிமை உத்தரவுகள், பரிசோதனைகள் ஆகியவற்றின் வழி தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்புகிறோம்," என்றார் திரு ஓங்.
500 ஜுவல்
ஊழியர்களுக்கு தொற்று இல்லை
சாங்கி விமான நிலையத்தின் ஊழியர்களுக்கு செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளின் ஒரு பகுதியாக, ஜுவல் ஊழியர்கள் சுமார் 500 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
விமான நிலையத்தின் சுமார் 9,000 ஊழியர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை இரவு நிலவரப்படி 7,641 ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக திரு ஓங் தெரிவித்தார்.
அவர்களில் 6,000 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. ஆறு பேருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள தொற்றுக் குழுமம் சிங்கப் பூரின் ஆகப் பெரிய தொற்றுக் குழுமமாக உள்ளது.
தொற்றுள்ளவர்கள் பலருக்கும் இந்தியாவில் பரவிவரும் பி1617 உருமாறிய கிருமிவகை தொற்றிய தாக பரிசோதனைகளின் முன் னோட்ட முடிவுகள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

