தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகள் நடுநிலையுடன் அமைந்திருப்பதாக தொழில்துறை கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றாக இயங்கும் நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிக்கக் கோரும் அதேநேரம் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளால் மோசமான நிலையைச் சந்திக்கும் நிறுவனங்கள் நீக்குப்போக்கான சம்பள முறையைத் தொடரலாம் என்றும் பரிந்துரைகள் அமைந்திருப்பதை அவர்கள் சுட்டினர். மன்றத்தில் உயர்மட்டக் குழு நேற்று வெளியிட்ட வழிகாட்டிக் குறிப்புகளைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு கருத்துரைத்து உள்ளனர்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக சபையின் தலைமை நிர்வாகி விக்டர் மில்ஸ், "சம்பள மன்றத்தின் அறிவிப்பு மிகச் சரியாக அமைந்துள்ளது. இதற்கு மேல் இன்னும் என்ன பரிந்துரைக்கப்பட்டு இருக்கலாம் என்பதற்கோ என்ன விடுபட்டுள்ளது என்பதையோ கணிப்பது கடினம்.
"ஆக அண்மைய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஏற்ப கூடுதல் அரசாங்க ஆதரவை பரிந்துரைகள் உள்ளடக்கி இருப்பதையும் காணமுடிகிறது. இந்த நடவடிக்கைகள் அவசியம் என்பதைப்போல அதிகரிக்கப்பட்ட வேலை ஆதரவுத் திட்டமும் ஒரு மாத வாடகை விலக்கும் உணவு, பானத் துறைக்கு உதவியாக அமையும்," என்றார்.
நாளை முதல் உணவகத்திற்குள் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்னும் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்பைத் தொடர்ந்து உணவு, பான வர்த்தகங்களுக்கான வேலை ஆதரவுத் திட்ட உதவியை அரசாங்கம் 50 விழுக்காடு உயர்த்த உள்ளது. இவ்வாண்டு ஜூன் வரை வழங்கப்பட உள்ள 10 விழுக்காடு சம்பள ஆதரவு 50 என்னும் இந்த உயர்வைக் காண்கிறது.

