உணவங்காடி நிலையங்களில் சாப்பிடுவோர் தங்களது சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்துக் கொடுத்து மேசையை சுத்தமாக வைத்துக்கொள்வது ஜூன் 1 முதல் கட்டாயமாகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இதனை அறிவித்தது.
டிஷ்யூ தாள்கள், துடைத்த தாள்கள், உறிஞ்சிகள், மென்பானக் குடுவைகள் (கேன்), பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பாட்டுச் சிதறல்கள் போன்றவற்றையும் சாப்பாட்டு மேசையில் அவர்கள் விட்டுவைக்கக் கூடாது.
உணவங்காடி நிலையங்களுக்குச் சாப்பிடச் செல்வோர் புதிய நடைமுறைக்குத் தங்களைத் தயார்ப்படுத்தும் வகையில் உத்தரவை மீறுவோர் மீது ஆகஸ்ட் 31 வரை நடவடிக்கை எடுக்கப்படாது.
இந்த மூன்று மாத காலத்தில் புதிய நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
புதிய நடைமுறையை அவர்
களுக்கு நினைவூட்டும் பணியில் பாதுகாப்பு இடைவெளித் தூதுவர்கள், எஸ்ஜி கிளீன் தூதுவர்கள், சமூகத் தொண்டூழியர்கள், தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் போன்றோர் ஈடுபடுவர். புதிய நடைமுறையை விளக்கும் சுவரொட்டிகளும் பதாகைகளும் நிறுவப்படும் என வாரியம் கூறியது.
செப்டம்பர் 1ல் புதிய நடைமுறை நடப்புக்கு வந்த பின்னர் முதல் தடவை அதனை மீறுவோருக்கு எழுத்துபூர்வமான எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைப்போர் இழப்பீட்டு அபராதமாக 300 வெள்ளியைச் செலுத்த வேண்டி வரும்.
அதற்குப் பின்னரும் விதிமீறுவோர் நீதிமன்ற அபராதத்தை எதிர்நோக்குவர் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னரும் மேசையைச் சுத்தம் செய்யும்படி அமலாக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்வர். அந்த ஆலோசனைக்கு உட்பட மறுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சாப்பாட்டுத் தட்டுகளை ஒப்படைக்க சாப்பிடுவோருக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் உணவங்காடி நிலையங்களில் சாப்பாட்டுத் தட்டு வைக்கும் வசதி அதிகப்
படுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
இந்தப் புதிய நடைமுறையை காப்பிக் கடைகளுக்கும் உணவு நிலைங்களுக்கும் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் சிங்கப்பூர் உணவு அமைப்புடன் வாரியம் இணைந்து செயல்படும்.
விதிமீறுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க புதிய சட்டம் எதையும் வாரியம் முன்னுரைக்கத் தேவை இருக்காது.
சுற்றுப்புற பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் குப்பை போடும் குற்றத்திற்கான தண்டனை நடப்பில் உள்ளது.
சாப்பாட்டு மேசையை அசுத்தமாக வைத்திருப்பதற்கும் நடப்பில் உள்ள சட்டமே பயன்படுத்தப்பட உள்ளது.

