கொரோனா இருந்த ஊழியர் இந்தியாவிற்குத் திரும்ப சாங்கி விமான நிலையம் வரைச் சென்றார்

கொரோனா இருந்த ஊழியர் இந்தியாவிற்குத் திரும்ப சாங்கி விமான நிலையம் வரைச் சென்றார்

2 mins read
6be0d143-2c09-440d-847e-f670cc83fa43
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியான ஒரு வெளிநாட்டு ஊழியர் சாங்கி விமான நிலையம் வரை சென்றபோது நிலையத்தின் ஊழியர்கள் அவருக்கு இந்தியா செல்வதற்குப் பயணச்சீட்டு வழங்க மறுத்தனர். அதையடுத்து நான்கு மணி நேரம் அந்த விமான நிலையத்தில் காலந்தாழ்த்திக் கொண்டிருந்தார்.

25 வயது திரு பாலச்சந்திரன் பார்த்திபன் தமது ஊழியர் தங்குவிடுதியில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டியவர். அவர் கள்ளத்தனமாக விடுதியை விட்டு கிளம்பினார்.

இந்தியா நாட்டைச் சேர்ந்த பாலச்சந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (மே 14ஆம் தேதி) தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இச்சட்டத்தின் கீழ் வரும் மற்றொரு குற்றச்சாட்டும் அச்சுறுத்தலுக்கான குற்றச்சாட்டும் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மே 23ஆம் தேதியில் திரு பாலச்சந்திரன் அவரின் விடுதியில் நோய்வாய்ப்பட்டத்தாக தெரிவித்தார். காய்ச்சலும் தொண்டை ஏரிச்சலும் இருப்பதாக முறையிட்டார்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மருத்துவ வண்டியில் கொண்டு செல்லப்பட்டார். மதியம் 1.40 மணிக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியே செல்ல முடியாது என்று அவரிடம் கூறப்பட்டது.

ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அவர் மாலை 5.35 மணிக்கு மருத்துவமனையைவிட்டு வெளியேறிவிட்டார். நடந்து சென்று லோவர் டெல்ட்டா ரோட்டுக்குப் பேருந்து மூலம் சென்ற பின்னர் சாங்கி விமான நிலையத்திற்கு டாக்சி எடுத்து சென்றார்.

இந்தியாவிற்கு பயணச்சீட்டு வாங்க முடியாமல் விமான நிலையத்தின் 'டர்மினல் 1' பகுதியில் நான்கு மணி நேரம் காலந்தாழ்த்தி சுற்றிக்கொண்டிருந்தார். பின்னர் போலிசார் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜூன் 8ஆம் தேதி கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானப் பின்னர் பாலச்சந்திரன் தங்குவிடுதியில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டியிருந்தது, ஆனால் ஜூன் 16ஆம் தேதி அதிகாலை நேரத்தில் தங்குவிடுதியை விட்டு கிளம்பி அவர் மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றார்.

மறுபடியும் அவருக்கு பயணச்சீட்டு வழங்க மறுக்கப்பட்டது. அப்போது அவர் விமான நிலையத்தில் தூங்கிவிட்டார்.

அடுத்த நாள் தெம்பனிஸ் வட்டாரத்தில் தங்கியிருந்த உறவினரின் வீட்டிற்கு அவர் சென்றார். வீட்டுக்கு சென்று விடுதியைவிட்டு கள்ளத்தனமாக கிளம்பி வெளியே வந்ததாக அவர் உறவினரிடம் சொன்னார்.

அந்த உறவினர் பாலச்சந்திரனின் மேற்பார்வையாளரை அழைத்து நடந்ததைக் கூறினார். சிறிது நேரம் கழித்து போலிசார் அந்த வீட்டுக்கு வந்து பாலச்சந்திரனை தங்குவிடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது மனநல கழகத்தில் பாலச்சந்திரன் மனநல கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் ஒவ்வொரு குற்றத்திற்கும் 6 மாத காலம் வரை சிறைத்தண்டனை அல்லது $10,000 வரை அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம்.