சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகப் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சூழலில் கலைகள், விளையாட்டுத் துறைகளுக்கு மேலும் ஆதரவு கிடைக்க இருக்கிறது.
மே 16 முதல் ஜூன் 13 வரை அனுமதிக்கப்படும் நேரடி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைகள் மற்றும் கலாசார நிறுவனங்களுக்கு, நிகழ்ச்சிக்கு முன்னதாக இடம்பெறும் கொவிட்-19 பரிசோதனைக்கு ஆகும் செலவை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மானியமாகக் கொடுக்கும்.
இதன் தொடர்பிலான மேல் விவரங்களைத் தேசிய கலைகள் மன்றம் வெளியிடும் என்றும் இந்த அமைச்சு இன்று தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்க, 'கலை, கலாசார மீள்திறன் உதவித் திட்டம்' என்ற ஒரு திட்டம் மூலமாகவும் கலைத் துறை பயன் அடையலாம்.
இந்த உதவித் திட்டத்தில் சென்ற ஆண்டில் $75 மில்லியன் போடப்பட்டுள்ளது.
ஸ்போர்ட் சிங்கப்பூர் இயக்கம் அமலாக்கும் நிவாரண உதவித் திட்டங்கள் மே 30ல் முடிவடைய இருந்தன.
அவை ஜூன் 13 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. அவற்றை விளையாட்டுத் துறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனிடையே, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், இது பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் பல விவரங்களைத் தெரிவித்தார்.
தன் அமைச்சுக்குக்கீழ் வரும் துறைகள் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இரு மடங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இருந்தாலும் கட்டுப்பாடுகள் தேவை என்றார். வாழ்க்கையை மட்டும் பாராமல் வாழ்வாதாரத்தையும் பார்க்கவேண்டிய கால கட்டம் இது என்று அமைச்சர் கூறினார்.
"பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளைச் சமாளிக்க செலவுகளை ஈடுசெய்ய, சிரமமான காலகட்டத்தில் இருந்து மக்கள் மீண்டுவர என்ன உதவி செய்யலாம் என்பது பற்றி அமைச்சரவை சகாக்களுடன் நான் விவாதித்தேன்," என்று அமைச்சர் எட்வின் டோங் குறிப்பிட்டார்.

