உணவகத்தில் சாப்பிட அனுமதியில்லை; உணவை கொண்டு கொடுக்க தயாராகின்றன
சிங்கப்பூரில் சமூகத்தொற்று அதிகரிப்பதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன. ஜூன் 13 வரை நீடிக்கும் புதிய கட்டுப்பாடுகளின்படி உணவகங்களில் யாரும் சாப்பிட முடியாது. பதிலாக உணவை வீட்டிற்கு வாங்கி செல்லலாம். அல்லது வீட்டிற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளலாம்.
உணவகங்களில் சாப்பிடுவதற்கு அனுமதி இருக்காது என்று தாங்கள் எதிர்பார்த்ததாக பல உணவகங்கள் கூறின என்று சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
இருந்தாலும் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இவ்வளவு விரைவில் இவ்வளவு காலத்திற்கு இடம்பெறும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவை கூறின.
ஸ்டான்லி ஸ்திரீட்டில் செயல்படும் ரெஸ்டாரண்ட் கியாக், மரினா பே நிதி மையத்தில் செயல்படும் லிவி133, ஃபேட் கௌ போன்ற உணவகங்களை நடத்தும் காமன்வெல்த் கோன்செப்ட்ஸ் நிறுவனம் போன்றவை இவற்றில் அடங்கும்.
பல உணவங்களைப் பொறுத்த வரை தங்கள் சமையலறையில் வாங்கி வைக்கப்பட்டு இருக்கும் உணவை ஒழுங்குப்படுத்துவதே முதல் காரியமாக இருக்கிறது.
உணவைக் கட்டிக் கொடுப்பது, வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பது ஆகியவற்றுக்கு கைவசம் உள்ள வளங்களை மனதில்கொண்டு திட்டமிடுவதில் மிகவும் உத்திபூர்வமாக நடந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று ரெஸ்டாரண்ட் கியாக்கைச் சேர்ந்த திருவாட்டி நூரியா கிப்பர்ட் கூறினார்.
அதோடு, கூடுதல் செலவுகளைக் குறைக்கவும் வேண்டி இருக்கிறது. இப்போதைக்கு இருப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய கட்டுப்பாடுகளை மீறாமல் தொழிலை நடத்த எந்த அளவுக்குத் தயாரானாலும் உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை என்பது பாதிப்பாகத்தான் இருக்கும் என்பதைச் சில உணவகங்கள் ஒப்புக்கொண்டன.
உணவைக் கொண்டு கொடுக்கும் சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 விழுக்காடு தரகுக் கட்டணத்தை விதிக்கின்றன. ஆகையால் இதில் லாபம் பார்ப்பது என்பது சிரமமான ஒன்று என்று லிவி133 நிர்வாக இயக்குநர் மார்டின் பெம் கூறினார்.
முக்கியமான இடங்களில் அமர்ந்து சாப்பிட இட வசதிகளுடன், போதிய ஊழியர்களுடன் செயல்படும் எந்தவோர் உணவகமும் தன்னுடைய தொழிலை முற்றிலும் கொண்டு கொடுக்கும் சேவை பாணிக்கு மாறிவிட முடியாது என்றும் அப்படி மாறினாலும் அது செலவில் ஓரளவைதான் ஈடுசெய்யும் என்றும் திரு பெம் கூறினார்.
அரசாங்கத்தின் ஆதரவு அதிகரிப்பது பேருதவியாக இருக்கிறது என்று குறிப்பிட்ட இவர், வாடகை அடுத்த பிரச்சினை என்றார்.
ஏற்கெனவே சொத்து வரி தள்ளுபடி அளிக்கப்பட்டதைப் போல இப்போது நேரடி அல்லது மறைமுக ஆதரவு ஏதாவது இருக்குமா என்பதை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், சிறப்பு நிகழ்ச்சிகள் இதர நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவுகள் இருக்காது என்பதால் இது மேலும் கவலை தருவதாக திரு பெம் கூறினார்.

