சிங்கப்பூரில் மக்களுக்கு மேலும் இயற்கை வாழ்விடச் சூழலை உருவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக குடியிருப்புப் பேட்டைகளில் உரம் தயாரிப்பது போன்ற மேலும் பல பசுமை முயற்சிகளுக்கான திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன் தொடர்பில் மக்கள் செயல் கட்சியின் 15 நகர மன்றங்கள் செயல்திட்டங்களை உருவாக்கி உள்ளன. அவை அந்த மன்றங்களின் இயற்கை வள திட்டங்களை மேம்படுத்தும்.
இதன் மூலம் சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவாக அவை திகழும். நகர மன்றங்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுச் சூழல் துறை வல்லுநர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் சேர்ந்து செயல்பட அந்தச் செயல்திட்டங்கள் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து ஊக்கமூட்டும்.
மக்கள் செயல் கட்சி நிர்வகித்து நடத்தும் ஒவ்வொரு நகர்ப் பகுதியும் 2025 வாக்கில் அறவே விரயமில்லாத, எரிசக்தியை மிச்சப்படுத்தக்கூடிய, பசுமைமிக்க வட்டாரமாகத் திகழும் என்று மக்கள் செயல் கட்சி நேற்று அறிவித்தது.
ஒவ்வொரு மன்றத்தில் இருந்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இளம் மசெகவைச் சேர்ந்த தொண்டர்களுடன் சேர்ந்து 'பசுமை நகர் சிறப்புப் பணிக்குழு' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவார்.
ஜாலான் புசார் நகர மன்றத் தலைவர் வான் ரிசால் வான் சக்கரியா அந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பார்.
எரிசக்தியை மிச்சப்படுத்தும் விளக்குகளைப் பொருத்துவது, விவேகமான விளக்கொளித் திட்டம், மேலும் சைக்கிளோட்டத்திற்கு ஆதரவளிப்பது, பல அடுக்கு கார்பேட்டை கூரைகளில் தாவர வளத்தை அதிகப்படுத்துவது ஆகியவை இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்களில் உள்ளடங்கும்.
இதனிடையே, சிறப்புப் பணிக்குழு பற்றி கருத்து தெரிவித்த மசெக நகர மன்றங்களுக்கான ஒருமுகப்பாட்டுத் தலைவர் லிம் பியோவ் சுவான், புதிய பணிக்குழு இப்போதைய திட்டங்களைப் பரிசீலித்து எவை ஏற்புடையவை என்பதை மதிப்பிடும் என்றார்.
முதல் அறிக்கை இந்த அண்டு முடிவில் வெளியிடப்படும் என்று டாக்டர் வான் ரிசால் தெரிவித்தார்.
ஒவ்வொரு நகர மன்றமும் சொந்த திட்டங்களைக் காலக்கிரம முறைப்படி வெளியிடும் என்றும் இந்தப் பசுமை முயற்சிகளில் பொதுமக்கள் முக்கிய பணியாற்றுவர் என்றும் சிறப்புப் பணிக்குழு தலை வர் கூறினார்.