செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a9a7f671-febd-4a75-bb56-742c3468f8cb
-

ஆர்ச்சர்ட் நிலையத்தில் மெதுவாகச் சென்ற ரயில்கள்

ஆர்ச்சர்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் மூடி திறக்கும் தளமேடை கண்ணாடிக் கதவுகள் சரியாக மூடாமல் போனதை அடுத்து அந்த நிலையம் வழியாக இரு திசைகளிலும் ரயில்கள் மெதுவாக வந்து சென்றன.

அந்த வடக்கு-தெற்கு வழித்தடத்தின் இரு திசை களிலும் ரயில்களில் கதவுகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டது. என்றாலும் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்றுக் காலை சுமார் 9.30 மணிக்கு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கதவுகளை விட்டு விலகி இருக்கும் படி பயணிகளைக் கேட்டுக்கொண்ட அந்த நிறுவனம், பொறியாளர்கள் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கு கின்றன, பயணிகளுக்கு உதவ நடைமேடையில் அதிக ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள் என்றும் கூறியது.

மேரிஸ் ஸ்டெல்லா பள்ளி வாயில் கதவு அகற்றப்படும்

மேரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முகப்பு வாயில் கதவு அகற்றப்படும். பதிலாக இந்த ஆண்டு முடிவில் வேறு ஒரு கதவு பொருத்தப்படும். பழைய கதவுகளின் பல பாகங்களைக் கொண்டு அதேபோலவே புதிய கதவு உருவாக்கப்படும்.

அந்தப் பள்ளிக்கூடத்தின் இப்போதைய கதவு மவுண்ட் வெர்னன் ரோட்டில் இருக்கிறது. பிடாடரி குடியிருப்புப் பேட்டையில் வீடுகள் கட்டப்படுவதையொட்டி அந்தச் சாலையை அகலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது. உயர்நிலைப் பள்ளியின் புதிய கதவு பார்ட்லி வாக்கில் அமைந்திருக்கும்.

இதனிடையே, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பள்ளிக்கூடத்தின் வாயில் கதவைப் பழமை கெடாமல் கட்டிக்காப்பதற்கான வழிகள் பற்றி 2018 முதலே அந்தப் பள்ளிக்கூட நிர்வாகத்துடன் வீவக கலந்து ஆலோசித்து வந்ததாக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

பழைய கதவை அப்படியே கொண்டு வந்து புதிய இடத்தில் வைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் கதவுக்குச் சேதம் ஏற்பட்டுவிடும். மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருக்கும் என்று பொறியாளர்கள் தெரிவித்து விட்டார்கள்.

சிங்கப்பூர்- அமெரிக்கா ராணுவ பயிற்சி நிறைவு

சிங்கப்பூர்-அமெரிக்கா இரு நாடுகளின் ராணுவங்கள் ஒருவார கால போர் பயிற்சியை நடத்தி முடித்துள்ளன.

கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டு பயிற்சி மெய்நிகர் ரீதியில் நடந்தது. 'டைகர் பாம் பயிற்சி' என்று குறிப்பிடப்படும் அந்த இரு நாட்டு ராணுவப் பயிற்சி இந்த ஆண்டு மே 7 முதல் 14 வரை நடந்தது.

அந்தப் பயிற்சி 1981 முதல் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சிங்கப்பூர் ராணுவத்திற்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் இடையில் நீண்டகாலமாக நடப்பில் இருந்து வரும் இருதரப்பு ராணுவப் பயிற்சி இதுவே.

கொரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு பயிற்சி நடக்கவில்லை. இதனிடையே, அந்தப் பயிற்சி இரு நாட்டு ராணுவங்களும் இருதரப்பு உறவைப் பலப்படுத்த உதவியதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்தது.