சாங்கி சிறைச்சாலையில் உள்ள கைதிகள், ஊழியர்கள், குத்தகைக்காரர்கள், தொண்டூழியர்கள் என சுமார் 5,000 பேருக்கு கொவிட்-19 கிருமிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறைச்சாலை சமையலறையில் பணியாற்றும் சமையற்காரர் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
அடுத்த சில நாட்களில் பரிசோதனைகள் நடைபெறும் என்று சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பரிசோதனைகளை நடத்துவதற்கு ஏதுவாக, மறுவாழ்வுத் திட்டங்கள் உள்பட, சிறைக்கைதி களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். இந்நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் குத்தகைதாரர்கள், தொண்டூழியர்கள் அனைவருக்கும் அது குறித்து தெரிவிக்கப்படும்,
அத்துடன், சிறைக்கைதிகளுக்கான நேரடி சந்திப்புகளும், காணொளி சந்திப்புகளும் அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்தப்படும். அவற்றுக்கு பதில் சிறைக்கைதிகள் தொலைபேசி அழைப்புகளைச் செய்ய வசதி செய்து தரப்படும்.
சிறைச்சாலைக்குள் செல்ல முன்பதிவு செய்துள்ள குடும்பத்தினரும் தங்கள் அன்புக்குரியவர்களை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும் சிறைக்கைதிகள் அவர்களின் குடும்பங்களை மின் கடிதங்கள் வழி தொடர்புகொள்ள வசதி உண்டு,
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நேற்றுமுன்தினம் மேலும் பல நடவடிக்கைகளை அறிவித்ததன் தொடர்பில் சிறைச்சாலைத் துறையும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட சிறைச்சாலை சமையற்காரர் கடைசியாக புதன்கிழமை வேலைக்குச் சென்றார். அன்று பணி முடிந்தவுடன் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மாலையில் மருத்துவரை நாடினார். வியாழக்கிழமை அன்று அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு முன்னதாகவே தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அவர் பணியாற்றிய ஏ5 பகுதியில் சமையலறை மூடப்பட்டுள்ளது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்களையும் கைதிகளையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவரது நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகள் தனிமை உத்தரவைச் சிறையிலும் மற்றவர்கள் சுகாதார அமைச்சின் தனிமை உத்தரவு விடுக்கப்பட்டவர்களுக்காக அமைத்துள்ள இடங்களிலும் தனிமையில் உள்ளனர்.