பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுத்தார்

பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுத்தார்

2 mins read
9a44474a-35ba-486c-a599-685f097762f5
-

மரினா பே சேண்ட்சில் முகக்கவசம் அணிய மறுத்த பெண்ணிடம் போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு இடைவெளித் தூதர் ஒருவர் பலமுறை கேட்டுக்கொண்டும் அந்த 53 வயதுப் பெண் முகக்கவசம் அணிய மறுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று போலிஸ் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இதன் தொடர்பில் நேற்று மாலை 5.15 மணியளவில் உதவி கோரி போலிசுக்கு அழைப்பு வந்தது. பொது இடத்தில் இடையூறு விளைவித்ததற்காகவும் பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறியதற்காகவும் அப்பெண்ணிடம் போலிஸ் விசாரித்து வருகிறது.

சம்பவம் குறித்த காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அதில், முகக்கவசம் போடுமாறு அந்தப் பாதுகாப்பு இடைவெளித் தூதர் பலமுறை கேட்டுக்கொள்வதும் ஆயினும், அதை ஏற்க மறுத்து அப்பெண் அவருடன் வாக்குவாதம் செய்வதும் தெரிகிறது.

மாறாக, அந்தத் தூதரின் அடையாள வில்லை எங்கே என்று திரும்பத் திரும்ப அப்பெண் கேட்பதும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்று அப்பெண் முகக்கவசமின்றி சென்று வந்ததாக நம்பப்படுவதாக போலிஸ் கூறியது.

பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் அப்பெண் சென்று வந்தது தொடர்பில் இரு காணொளிகள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒரு காணொளி கடந்த பிப்ரவரி மாதம் விவோசிட்டியிலும் இன்னொன்று சென்ற ஆண்டு டிசம்பரில் கிளார்க் கீ சென்ட்ரலிலும் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 2வது சம்பவத்திலும் கடைத்தொகுதி ஊழியருடன் அப்பெண் வாக்குவாதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

முகக்கவசம் அணியாத அல்லது முறையாக அணியாத குற்றம் உறுதிசெய்யப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.