புதிய கட்டுப்பாடுகள் அமல்; மக்கள் நடமாட்டம் குறைந்தது

சமூகத்தில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த முதல் நாளான இன்று பூங்காக்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் சந்தைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை, சமூக ஒன்றுகூடல்களில் இருவருக்கு மேல் இடம்பெற அனுமதியில்லை; உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது.

தேக்கா சந்தை, உணவு நிலையத்திற்கு நேற்றுக் காலை சென்று பார்த்தபோது, வாடிக்கையாளர்கள் மேசைகளையும் நாற்காலிகளையும் பயன்படுத்த முடியாத வகையில் நெகிழித்தாள் கொண்டு மறைக்கப்பட்டிருந்தன. அங்கு கிட்டத்தட்ட நான்கில் ஒரு உணவுக்கடை மூடப்பட்டிருந்தது. பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் சிலரை அந்தப் பகுதியில் காண முடிந்தது.

தெமாசெக் இந்திய ரோஜாக் கடையில் கடந்த 17 ஆண்டுகளாக வேலை செய்து வரும் திருவாட்டி ஜரினா பேகம், 55, வாடிக்கையாளர்வருகை கிட்டத்தட்ட 70% குறைந்துவிட்டதாகக் கூறினார்.

“கொவிட்-19 தொற்று குறித்து மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதால் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தைவிட இன்று காலை வர்த்தகம் மோசமாக இருந்தது,” என்றார் திருமதி ஜரினா.

வரும் மாதங்களில் தமது தொழில் எப்படி இருக்குமோ என்றும் அவர் கவலைப்படுகிறார்.

“ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் வருவர் என்பதால் வியாபாரம் பரபரப்பாக இருக்கும். ஆனால் இன்று (நேற்று) வியாபாரம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் செலவுகளை எப்படி ஈடுகட்டுவது? அதை நினைத்தால் மனஉளைச்சலாக இருக்கிறது,” என்றார் தேக்கா நிலையத்தில் ஆடைக் கடை வைத்திருக்கும் திரு ப.முருகேசன், 58.
அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக நேற்று லிட்டில் இந்தியா வந்திருந்த இல்லத்தரசி திருவாட்டி நித்யா வெங்கட், 48, “காய்கறி, பூக்கள் என எல்லாப் பொருள்களும் கடைகளில் அதிக அளவில் இருந்தன. கூட்டம் குறைவாக இருந்ததால் நிதானமாக என் வேலைகளை முடிக்க முடிந்தது,” என்றார்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பூமலை, புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி ஆகிய இடங்களில் கூட்டம் குறைந்துவிட்டதாகவும் பொதுவாக அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதாகவும் காலை நேரத்தில் பூங்காவிற்கு வழக்கமாக வந்துசெல்வோர் கூறினர்.

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் தேசிய பூங்காக் கழகப் பணியாளர்களும் கூட்டத்தைக் கண்காணித்தபடி இருந்தனர். மலையேறிகள் பெரும்பாலும் இருவர் இருவராகவும் முகக்கவசம் அணிந்திருந்ததையும் காண முடிந்தது.

கடந்த இருநாள்களிலும் மலையேற்றத்தில் ஈடுபட்ட இல்லத்தரசி திருவாட்டி வோங், 56, கூறுகையில், “நேற்று (சனிக்கிழமை) காலையில் திருவிழாக் கூட்டம்போல் இருந்தது. புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருமுன், நண்பர்கள் அல்லது குடும்பத்தினராக பெரிய குழுக்களாக மலையேற முயன்றனர். ஆனால், இன்றோ கூட்டமே இல்லை. வழக்கமான வாரயிறுதி கூட்டம்போல காணப்படவில்லை,” என்றார்.

பூமலையில் வார நாள்களின் காலையில் இருப்பதைப் போன்ற கூட்டமே இன்றும் காணப்பட்டது.ஒவ்வொரு வார இறுதியைப் போல நேற்றும் தம் நண்பருடன் அங்கு சிற்றுலா வந்திருந்தார் திருவாட்டி அனிஸ் அப்துல், 26.
“வழக்கமாக, குழந்தைகளுடன் பல குடும்பங்கள் வந்திருப்பதைக் காண முடியும். வெளிநாட்டவர்கள், இல்லப் பணிப்பெண்கள் என இந்தத் திடலே நிரம்பி இருக்கும். ஆனால், இப்போது எவருமே இல்லாததுபோல் இப்பகுதி காணப்படுகிறது,” என்றார் அவர்.

அங்கு குறைந்தது மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு, கிட்டத்தட்ட 15 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சமூக நிறுவனம் ஒன்று அனுமதி பெற்று அங்கு இலவச யோகா வகுப்பை நடத்தியது. சற்றுத் தள்ளி இருந்தபடி பூங்காக் கழக அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். வகுப்பில் பங்கேற்ற அனைவரும் தங்களது பெயரைப் பதிவுசெய்து, விரைவுத் தகவல் குறியீட்டை வருடியதோடு தங்களது உடல்வெப்பநிலையையும் பரிசோதித்துக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!