புக்கிட் பாத்தோக் ஷெங் ஷியோங் பேரங்காடி ஊழியருக்கு கொரோனா

புக்கிட் பாத்தோக் ஷெங் ஷியோங் பேரங்காடி ஊழியருக்கு கொரோனா

1 mins read
98f2dbaa-7343-4902-8718-35c06b48f04c
-

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஷெங் ஷியோங் பேரங்காடியில் பணிபுரிபவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, அங்கு பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்நிறுவனம் இன்று தெரிவித்தது.

புளோக் 440 புக்கிட் பாத்தோக் அவென்யூ 8ல் இரவு நேரங்களில் வேலை செய்யும் அந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.

பேரங்காடிகளில் மளிகைப் பொருட்களை நிரப்புவதுதான் அந்த ஊழியரின் வேலை என்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு மிகவும் குறைவு என்றும் பேரங்காடி கூறியது. அவர் ஆகக் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்றதாக ஷெங் ஷியோங் நிர்வாகம் தெரிவித்தது. சளிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்த ஊழியர் நேற்று முன்தினம் மருத்துவரை நாடினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர் இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தடுப்பூசியை அவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று போட்டுக்கொண்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.