பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

1 mins read
2dd0a1a8-c439-44b2-b517-882ad3a95929
-

வரும் வாரங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். அதே வேளையில், பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் திறந்திருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

"பெற்றோர்கள் பலரும் அத்தியாவசியப் பணியாளர்களாக இருப்பதால் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை அறிந்துள்ளோம். "இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவும் வகையில், பள்ளிகளின், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களின் சேவைகள் தேவைப்படும். அத்தகைய சேவைகள் தேவைப்படும் பெற்றோர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவ எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்," என்று திரு சான் கூறியுள்ளார்.

பணியிடங்களில் பெரும்பாலும் வீட்டிலிருந்தபடி வேலை செய்வது புதிய இயல்புநிலையாக இருப்பதால், சாத்தியமுள்ள பட்சத்தில் இந்தக் காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படி கல்வி அமைச்சு ஊக்குவிக்கிறது.

அப்படி பாலர் பள்ளிகளில் பயிலும் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடியும் பெற்றோர்களுக்காக, பாலர் பள்ளி மானியங்களைப் பெறத் தேவையான குறைந்தபட்ச வருகைப்பதிவைத் தளர்த்த பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.

அதுபோல, எல்லாப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடிவுசெய்தால், இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பாலர் பள்ளிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற தேவையைத் தளர்த்தவும் பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் தயாராகிறது.

வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை சில பெற்றோர்களுக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்துள்ளதாகவும் திரு சான் சொன்னார்.