பள்ளிகளிலும் துணைப்பாட வகுப்பு களை நடத்தும் நிலையங்களிலும் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பெற்றோரிடம் அரசாங்கம் இணையம் வழி கருத்து சேகரிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பெற்றோர் பலர் தம்மிடம் கேள்விகள் கேட்டிருப்பதாகவும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அனுப்பியிருப்பதாகவும் கல்வி துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
"பள்ளிகளும் துணைப்பாட வகுப்பு நிலையங்களும் தொடர்ந்து இயங்குவது குறித்து பலர் அக்கறை தெரிவித்திருக்கிறீர்கள். பள்ளி விடுமுறையை முன்னதாகவே தொடங்க சிலர் அழைப்பு விடுத்துள்ளீர்கள். தொடர்ந்து வேலை செய்ய இருப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே இருந்து கல்வி கற்கும் அணுகுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் அதைச் சமாளிப்பது சிரமம் என்று தெரிவித்திருக்கிறீர்கள்," என்று திருவாட்டி சுன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
form.gov.sg இணையப்பக்கத்துக்குச் சென்று தங்கள் கருத்து
களைப் பகிர்ந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று முதல் இம்மாதம் 28ஆம் தேதி வரை வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறைக்கு ஏழு தொடக்கப்பள்ளிகள் மாறுகின்றன. இந்தப் பள்ளிகளில் பயிலும் சில மாணவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
துணைப்பாட வகுப்புகளில் ஏற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்
களுடன் இந்த மாணவர்கள் தொடர்புடையவர்கள். பள்ளியில் மாணவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொங் ஹுவா பள்ளி, பால்ம் வியூ தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளி, செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஸ்டீவன் பள்ளி, இயோ சூ காங் தொடக்கப்பள்ளி, யூ நெங் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து கல்வி பயில்வர்.
இயோ சூ காங் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஏற்கெனவே வீட்டிலிருந்து கல்வி கற்று வருகின்றனர். அப்பள்ளியில் இந்த அணுகுமுறை இம்மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பள்ளி மாணவர்கள் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கு இருக்கும் அதே கவலை தமக்கும் இருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
"பாதிக்கப்பட்ட பள்ளிகளில் உடனடியாகப் பாதுகாப்பு வளையத்தை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அவர். அதுமட்டுமல்லாது, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்றும் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்
படுவர் என்றும் அவர் கூறினார். இணைப்பாட நடவடிக்கைகள் இணையம் மூலம் நடத்தப்படும் என்றும் பள்ளி இடைவேளை நேரத்தில் சமூக இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினர். தனியார் துணைப்பாட வகுப்புகளும் இணையம் மூலம் நடத்தப்படவேண்டும் என்றார் அமைச்சர் சான்.

