செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fdc152a0-208e-425a-9249-df27fef6ad27
-

தைவானிலிருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடு

தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தைவானில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 நாட்களில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் நேற்று இரவு 11.59 மணியிலிருந்து சிங்கப்பூர் வந்ததும் கட்டாயமாக 14 நாட்கள் இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் இந்த உத்தரவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து, மேலும் ஏழு நாட்களுக்கு அவர்கள் தங்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தைவானிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அதையடுத்து, 14 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறையும் 21வது நாளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறையும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக் ஷெங் ஷியோங் பேரங்காடி ஊழியருக்கு கொரோனா

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஷெங் ஷியோங் பேரங்காடியில் பணிபுரிபவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, அங்கு பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.

புளோக் 440 புக்கிட் பாத்தோக் அவென்யூ 8ல் இரவு நேரங்களில் வேலை செய்யும் அந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.

பேரங்காடிகளில் மளிகைப் பொருட்களை நிரப்புவதுதான் அந்த ஊழியரின் வேலை என்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு மிகவும் குறைவு என்றும் பேரங்காடி கூறியது.

அவர் ஆகக் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்றதாக ஷெங் ஷியோங் நிர்வாகம் தெரிவித்தது.

சளிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்த ஊழியர் நேற்று முன்தினம் மருத்துவரை நாடினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர் இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தடுப்பூசியை அவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று போட்டுக்கொண்டார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.