துணை போலிஸ் அதிகாரிகளை பாதுகாப்புச் சேவைக்கு நியமிக்கும்போது சிங்கப்பூர் போலிஸ் படையின் (எஸ்பிஎஃப்) பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்த்தலுக்குப் பின்னரே அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விதிகளுக்கு இணங்க துப்பாக்கி ஆயுதங்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில் செர்ட்டிஸ் மற்றும் ஏட்டோஸ் போன்ற துணைப் போலிஸ் படைகளிடம் வழக்கமான சோதனைகளை போலிஸ் படை நடத்தும். 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் எழுப்பிய சந்தேகத்திற்குப் பதில்அளிக்கையில் போலிஸ் படை இவ்வாறு தெரிவித்தது.
ஏட்டோஸ் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர், போலிஸ் படை அதிகாரிகளுக்கு துப்பாக்கி வழங்குவது தொடர்பான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் மீது கேள்வி எழுந்துள்ளது.
மஹாடி முகம்மது முக்தார், 38, எனப்படும் அந்த அதிகாரி, தமது பணிக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன், கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றில் $24,000க்கும் மேற்பட்ட ரொக்கத்தைக் கொள்ளையடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆயுதக் கொள்ளையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதல் சம்பவம்.
ஏப்ரல் 12ஆம் தேதி கார்ப்பரேஷன் டிரைவில் உள்ள ஏட்டோஸ் தலைமையகத்தில் பணி அமர்த்தப்பட்ட நிலையில், அதற்கு முன்னரே அங்கு வந்த மஹாடி, துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக அவர் கைது செய்யப்பட்ட பின்னர் போலிஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பின்னர் சீருடையில் இருந்து சாதாரண உடைக்கு மாறிய அவர், அனுமதியின்றி தலைமையகத்தை விட்டு வெளியேறினார். குற்றச் செயலில் ஈடுபட்ட பின்னர் தலைமையகம் திரும்பிய அவர், சீருடைக்கு மாறி, தமக்கு வேலை ஒதுக்கப்பட்ட இடத்திற்கு தமது நிறுவனத்தின் வேனில் சென்றார்.
துப்பாக்கி எடுத்துச் செல்லும் அதிகாரிகளை அடையாளம் காண அங்க அடையாளத் தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்படுவதாக செர்ட்டிஸ், ஏட்டோஸ் நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தன.
மேலும், பணிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் வேலையில் இருக்கும் நேரங்களில் மட்டுமே துப்பாக்கி ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்திற்குள் துப்பாக்கியையும் இதர ஆயுதங்களையும் எந்த ஓர் அதிகாரியும் ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் அது பற்றி மேற்பார்வை அதிகாரிகளுக்கும் ஆயுதக்கலன் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்று ஏட்டோஸ் கூறியது.

