பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளுக்கு இணங்கி நடக்காததற்காக 70 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது.
அவர்களில் 47 ஆண்களும் 23 பெண்களும் அடங்குவர். இம்மாதம் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், 15-16 வயதுக்குட்பட்ட அவர்கள் பெரிய அளவிலான குழுக்களாக இணைந்து குடித்தும் பாட்டுப் பாடியும் கும்மாளம் அடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் தேதி காக்கி புக்கிட் சாலையில் உள்ள ஒரு தொழிலகக் கட்டடத்தில் இடம்பெற்ற சச்சரவு தொடர்பில் விசாரித்துக்கொண்டு இருந்தபோது, அங்குள்ள இன்னொரு கட்டடத்தில் இருந்து பெரும் சத்தம் வந்தது போலிசார் காதில் விழுந்தது.
அதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது, உள்ளே 20 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒன்பது பேரும் பெண்கள் அறுவரும் குடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதே நாளில், கிரீன்வுட் அவென்யூவிலுள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றுகூடல் இடம்பெறுவதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அக்குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, 15 முதல் 41 வயதுக்குட்பட்ட ஆண்கள் 19 பேரும் பெண்கள் பத்துப் பேரும் ஒன்றாகக் கூடி, குடித்து, கும்மாளமிட்டபடி இருந்ததாகக் கூறப்பட்டது.
அங்கிருந்த 23 வயது ஆடவர் ஒருவர் வேண்டுமென்றே போலிஸ் அதிகாரிகளைத் திரும்பத் திரும்ப தகாத சொற்களால் பழித்ததாகச் சொல்லப்பட்டது. அதையடுத்து, அரசாங்க அதிகாரியை நோக்கி இழிசொற்களைப் பயன்படுத்தியதற்காக அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
அக்குடியிருப்பில் இருந்த 40 வயது ஆடவர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து, போதைப்பொருள்களின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் அவரையும் போலிசார் கைது செய்தனர்.
கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தில், ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள ஓர் அலுவலகத்தில் ஒன்றுகூடல் இடம்பெறுவதாக போலிசுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது, 24 முதல் 56 வயதுக்குட்பட்ட ஆடவர் 19 பேரும் பெண்கள் எழுவரும் ஒன்றுகூடிக் கும்மாளமிட்டது தெரியவந்தது.
இந்த மூன்று சம்பவங்களிலும் பொதுக் கேளிக்கையும் மதுபானங்களும் உரிய உரிமமின்றி வழங்கப்பட்டதாக போலிஸ் குறிப்பிட்டது.
கரவோக்கே சாதனம். மதுபான விநியோகம், விருந்து துணைச்சாதனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
உரிய உரிமமின்றி பொதுக் கேளிக்கை அல்லது மதுபானம் விநியோகித்த குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அரசாங்க அதிகாரி மீது இழிசொல்லைப் பயன்படுத்துவது தண்டிக்கத்தக்க குற்றம் என்பதால் $5,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) ஒழுங்குவிதிகள் 2020 சட்டத்தின்கீழ் வரும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளுக்கு இணங்கி நடக்காத குற்றம் உறுதிசெய்யப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

