ஆர்த்தி சிவராஜன்
ஒரு குழந்தையின் தனி அடையாளத்துடன் சமூக மற்றும் கலாசார அடையாளத்தையும் வளர்ப்பதில் தாய்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு தமிழ்மொழி ஆர்வத்தை இளம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடையே ஊக்குவிப்பதைப் பற்றி அறிந்துகொள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம், 'இளவேனில்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இம்மாதம் 1ஆம் தேதியன்று காலை 11 முதல் பிற்பகல் 12:30 வரை 'ஸூம்' வழியாக நடைபெற்றது. தேசிய கல்விக் கழக ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் துணைத் தலைவரான முனைவர் சீதாலட்சுமி, 'நூல் மான்ஸ்டர்ஸ்' என்ற இணையத்தளத்தின் நிறுவனரான திருமதி அபி கிரிஷ், 'Tamilwithlove' எனும் அமைப்பின் நிறுவனரான திருமதி ஆஷா தேவி ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.
"நம் முன்னாள் மாணவர்கள் திருமணமாகி, தொழிலில் முன்னேறி, குழந்தைகள் பெற்று, இளம் பெற்றோர்களாகிவிட்டனர். பல குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலை செய்கிறார்கள். அதனால் பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைந்துவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழ்மொழி ஆர்வத்தை ஊட்டுவது என்பது ஒரு சவாலான கேள்வி. இந்தக் கேள்விக்கு வெவ்வேறு தீர்வுகளைத் தருவதே இந்த ஆண்டின் 'இளவேனில்' நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
"வீட்டிலிருந்தவாறே பிள்ளைகளுக்குப் பெற்றோர் எவ்வாறு தமிழைச் சுலபமாகக் கற்றுக்கொடுக்கலாம் என்பதை இந்த நிகழ்ச்சி வழி அறிந்துகொள்ளலாம். இது எங்கள் இளையர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து இளம் பெற்றோர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்," என என்டியு தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு செம்பியன் சோமசுந்தரம் கூறினார்.
சிறப்புப் பேச்சாளர்களின் பயனுள்ள பகிர்வுகள்
தம் பிள்ளைகளுடன் எவ்வாறு விளையாடினார், அதன் மூலம் ஒரு படிப்பினையை எவ்வாறு அவர்களிடத்தில் உணர்த்தினார் ஆகியவற்றை விளக்கிய திருமதி தேவி. சிறு அம்சத்தைப் பற்றி கற்றுக்கொடுத்தாலும் அதை நடைமுறைக்கு ஏற்பச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நிறைய விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் பிள்ளைகளுக்கு எவ்வாறு தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கலாம் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
தமிழில் மழலையர் பாடல்களைக் குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி பேசினார் திருமதி அபி. அவர் உருவாக்கிய 'நூல் மான்ஸ்டர்ஸ்' இணையத்தளத்தை வீட்டிலேயே பயன்படுத்திக் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் கற்றுத் தரலாம் என்று கூறினார்.
காலங்காலமாக மாணவர்கள் எவ்வாறு பள்ளிகளில் முன்னேறி வருகிறார்கள், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் யாவை, அடைந்த முன்னேற்றங்கள் யாவை என்பதைப் பற்றி முனைவர் சீதாலட்சுமி பல்வேறு ஆய்வுகள் மூலம் விளக்கினார். வீட்டில் இருமொழிப் பயன்பாடு இருப்பது பற்றியும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 36 வயது திரு கோகுலராஜ் சுந்தரலிங்கம், "தமிழ் சமூகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு பல்லின கலாசாரச் சூழலில் என் பிள்ளைகளுக்குத் தமிழை எப்படி ஊட்டி வளர்ப்பது என்பது ஒரு புதிராகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு தெளிவான பாதையைக் காட்டியுள்ளது எனலாம்.
"முக்கியமாக இளம் பெற்றோராகிய நாம், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நமது மொழி அடையாளத்தை உணர்த்த, உற்சாகத்துடன் செயல்படுவது அவசியம் என்பதை உணர்ந்தேன்," என்று கூறினார்.

