ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி
கிருமிப்பரவல் முறியடிப்பு காலகட்டம் கடந்தாண்டு நடப்புக்கு வந்தபோது, எம்.கே. கீர்த்தனா உயர்நிலை நான்கில் இருந்தார். மாணவியாக இருந்தாலும் தன் சொந்த 'பிரவ்னி' வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை கீர்த்தனாவுக்கு இருந்தது.
தன்னிடம் பணம் அதிகம் இல்லாத நிலையில், ஒரு சில பொருட்களைக் கொண்டு தன் வியாபாரத்தைத் தொடங்கினார் அவர்.
தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகக் கிழக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு கண்மருத்துவத் துறையில் (optical studies) பயின்று வருகிறார். கிருமிப் பரவல் சூழலில் பள்ளிக்குச் செல்ல முடியாமல், நண்பர்களைக் காண முடியாமல் போனபோது தனது மனதிருப்திக்காக வியாபாரத்தில் கால்வைத்ததாக கீர்த்தனா கூறினார்.
"நண்பர் ஒருவர் செய்யும் முறையைப் பின்பற்றி 'நட்டெல்லா பிரவ்னி' செய்யத் தொடங்கினேன். கேக் செய்வதற்குரிய அடுப்பு இல்லாததால், 'மைக்ரோவேவ்' அடுப்பைப் பயன்படுத்தினேன்," என்று அவர் கூறினார். அவ்வாறு செய்யப்பட்ட பிரௌனிகளைச் சுவைத்த பிறகு தம்முடைய பெற்றோர் கூறியதை வைத்து கீர்த்தனா தனது 'பிரவ்னி'யைச் செம்மைப்படுத்தினார்.
ஆனால் இணையம் வழி இதுபோன்ற வர்த்தகங்கள் ஏராளமாக நடத்தப்பட்டு வருவதால், தனது வர்த்தகம் எவ்வாறு மாறுபட்டு இருக்கலாம் என்பது குறித்து அவர் யோசித்தார்.
ஜிசிஇ வழக்கநிலைத் தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தபோது மூன்று மாதங்களாக தன் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடுவதற்குப் பதிலாக வர்த்தகத்தை நடத்துவதற்காக தன்னை மேலும் தயார்படுத்திக்கொள்ள அவர் முடிவு செய்தார்.
நண்பர்களின் பரிந்துரைகளையும் கருத்துகளையும் கேட்டு, சர்க்கரை அளவை மாற்றுவது உள்ளிட்ட சில மாற்றங்களை கீர்த்தனா செய்து பார்த்தார்.
"வயதானோரும் சாப்பிடுவதற்கு ஏற்ற விதமாக இனிப்பு அளவைக் குறைத்துக்கொண்டேன். பிரவ்னி மிருதுவாக இல்லை என்று சிலர் கூறியபோது பால், வெண்ணெய் ஆகியவற்றின் அளவைத் தேவைக்கு ஏற்ப மாற்றினேன்," என்று அவர் கூறினார்.
இவ்வாறு பலரிடமிருந்தும் வரும் பரிந்துரைகள், ஒன்றுக்கொன்று முரணாக இருக்கவே செய்தன. எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என்பதில் குழப்பம் இல்லாமல் முடிவெடுத்தார் கீர்த்தனா.
நாளடைவில் உறவினர் ஒருவர், நண்பர் ஹுத்திகா ஆகியோருடன் இணைந்து தனது பிரவ்னியுடன் 'குக்கீஸ்', 'கப்கேக்ஸ்' ஆகியவற்றையும் கீர்த்தனா விற்று வரத் தொடங்கினார். உள்ளூர் பிரபலங்களின் துணைகொண்டு 'இன்ஸ்டகிராம்', 'டிக்டாக்' தளங்களைப் பயன்படுத்தியது, இவர் வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப் பெரிதும் உதவி யதாகத் தெரிவித்தார்.
தனக்கு வாகனம் இல்லாததால் தொடக்கத்தில் பதார்த்தங்களுடன் தானே பேருந்தில் சென்று தருவார் என அவர் பகிர்ந்துகொண்டார். பலர் ஒரே நேரத்தில் இவரது பதார்த்தங்களை நாடும்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியை நாடி பதார்த்தங்களைக் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.
இப்படி மனநிறைவு பெறுவதற்காகத் தொடங்கிய சிறு வர்த்தகத்தை, தொடர்ந்து கொண்டுபோவதற்குத் திட்டமிடுவது மட்டுமின்றி எந்தச் சூழலுக்கும் ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை தேவைப்படுகிறது என்பதை கீர்த்தனாவின் அனுபவத்திலிருந்து அறிய முடிகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இது வருத்தம் தரும் ஒரு சூழல் என்றாலும் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இடையே தொடர்ந்து தன் வியாபாரத்தை உற்சாகத் துடன் நடத்தப் போவதாகக் கூறினார் இளையர் கீர்த்தனா.

