முடிதிருத்தும் பணியாளரை மானபங்கம் செய்த ஆடவர் ஒருவருக்கு இன்று (மே 17) 10 மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
முடிதிருத்தும் கடையில் அந்த 32 வயது மாது தமது தலைமுடியைத் திருத்திக்கொண்டிருந்தபோது வில்சன் செல்வன்சன், 33, எனும் அந்த ஆடவர் அந்த மாதை மானபங்கப்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளை முன்னதாக ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த மாதின் பெயர், அந்த முடிதிருத்தகத்தின் பெயர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இவ்வாண்டு ஜனவரி 2ஆம் தேதி இரவு 7.40 மணியளவில் அந்த முடிதிருத்தும் கடைக்கு வில்சன் சென்றிருந்தார். 20 நிமிடங்கள் கழித்து முடிதிருத்தும் நாற்காலியில் அவர் அமர்ந்தார்.
அந்த மாது அவரது முடியைத் திருத்திக்கொண்டிருந்தபோது அந்த மாதின் வயது என்ன உள்ளிட்ட தனிப்பட்ட கேள்விகளை வில்சன் அவரிடம் கேட்டார்.
அந்த மாதின் முகத்தைத் தாம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த முகக்கவசத்தை அகற்ற முடியுமா எனவும் வில்சன் கேட்டார்.
அதன் பின்னர், அந்த மாது அணிந்திருந்த ஜீன்ஸ் காற்சட்டைக்குள் வில்சன் கையைத் திணித்து அவரை மானபங்கம் செய்தார்.
அந்தச் செயலை நிறுத்தும்படி அந்த மாது வில்சனிடம் கூறினார். அந்த மாதிடம் மன்னிப்பு கோருவதற்குப் பதிலாக, "இதில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?" என்று வில்சன் கேட்டார்.
வில்சனின் தலைமுடியை அந்த மாது தொடர்ந்து திருத்தினார். ஒரு சில நிமிடங்கள் கழித்து, வில்சன் அந்த மாதை மீண்டும் மானபங்கம் செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாது, உடனடியாக பின்வாங்கினார். வில்சன் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு அந்த மாது கூறினார்.
முடிதிருத்திய சேவைக்காக வில்சன் அந்த மாதிடம் $6 கட்டணம் செலுத்திவிட்டு, அவரது கைபேசி எண்ணைத் தருமாறு கேட்டார். எண்ணை வழங்க மறுத்துவிட்ட அந்த மாது, நடந்ததைக் கடையின் மேற்பார்வையாளரிடம் கூறினார்.

