மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் தன்னை ஒரு பங்காளியாக நிலைப்படுத்திக்கொள்வதுடன், அண்டை நாடுகளுடன் ஒரு வலுவான பங்காளித்துவத்தை சிங்கப்பூர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு, இவ்வட்டாரத்தில் சிறிய, பெரிய நாடுகளுடன் வர்த்தகப் பங்காளித்துவத்தின் மூலம் பணியாற்றி, வட்டார நாடுகளுடன் சிங்கப்பூரின் ஈடுபாட்டையும் அறிவாற்றலையும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.
கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சிங்கப்பூரின் பொருளியலை உருமாற்ற அமைக்கப்பட்ட 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு' நேற்று வெளியிட்ட பரிந்துரைகளில் இவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
"சிறிய மற்றும் திறந்த பொருளியலைக் கொண்டிருக்கும் நாடு என்ற முறையில் அனைத்துலக வர்த்தகம் சிங்கப்பூருக்கு இன்றியமையாதது," என்று கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட அந்தப் பணிக்குழு தெரிவித்தது.
"பிரச்சினைகள் நிறைந்த உலகில், எதிர்த் திசையில் வரும் அலைகளை நாம் கடந்து செல்வதற்குரிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு உலக நாடுகளுடன் வலுவான, அர்த்தமுள்ள அனைத்துலக பங்காளித்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
"சிங்கப்பூர் குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளுக்குப் பங்களிக்க வேண்டும். ஆசிய அளவில் சீனா, ஜப்பான் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய சந்தையாக ஆசியான் திகழ்கிறது. உலக அளவில் பார்க்கும்போது, அது ஐந்தாவது ஆகப் பெரிய சந்தையாகத் திகழ்கிறது.
அனைத்துலகமயமாக விழையும் நிறுவனங்களை ஒன்றுசேர்க்க இன்னும் அதிகமான தளங்கள் அமைக்கப்பட வேண்டும். பின்னர் வட்டார நாடுகளுடன் வர்த்தகம் புரிய அவற்றுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டும்," என்றும் பணிக்குழு விவரித்தது.
இது, உலக அளவில் தனித்து வர்த்தகம் செய்ய சிரமப்படும் நிறுவனங்கள், ஒரு குழுமமாக செயல்பட்டு, ஆக்கபூர்வமான ஒத்துழைப்புடன் வர்த்தகத்தில் வெற்றி பெற வழி வகுக்கும் என்றும் பணிக்குழுவின் அறிக்கை கூறியது.
பசுமை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள யோசனை
நீடித்த நிலைத்தன்மை துறையில் வளர்ச்சி வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும் முயற்சியின் ஓர் அம்சமாக, சிங்கப்பூர் தன்னை கரிம வர்த்தக மற்றும் சேவைகள் மையமாக வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு' நேற்று கூறியது.
"நீடித்த நிலைத்தன்மை என்றென்றும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான அம்சம் என்பதை கொவிட்-19 தெளிவாக எடுத்துரைத் திருக்கிறது. பசுமைப் பொருளியலுக்கு அதிகரித்து வரும் தேவை, சிங்கப்பூருக்கு இத்துறையில் தனது வளர்ச்சி நிலையை உறுதியாக்க ஒரு வாய்ப்பை அளித்துள்ளது," என்றும் 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு'வின் இணைத் தலைவரான தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
எல்லா நாடுகளும் வந்துபோகக்கூடிய வசதியான இடம், நம்பிக்கை மிகுந்த தரகர், நிபுணத்துவ சேவைகள், நிதி மையம் போன்ற மதிப்பைப் பெற்றுள்ள சிங்கப்பூர், கரிம சேவைகள் மற்றும் வர்த்தக மையமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நல்ல நிலையில் உள்ளது என்றும் திரு லீ சொன்னார்.

